பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

கொள்வதுமாய் இருந்தனர். ஆதலால், அந்த இடத்தில் எப்போதும் ஜனக்கும்பல். அதிகமாகவே இருந்தது. நமது சமயற்காரன் மற்ற மனிதர்களோடு சேர்ந்து தானும் ஒரு பாராக்காரன் போல நடித்து அந்த உடுப்புச் சாலைக்குள் நுழைந்து, நிஜார் சட்டை, தலைப் பாகை இடுப்பு வார், பட்டாக்கத்தி, முதலியவற்றை எடுத்து அணிந்துகொண்டு, தத்ரூபம் பாராக்காரன் போல மாறி அங்கிருந்து புறப்பட்டு நேராக திவானுடைய கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்து, அவ்விடத்தில் காத்திருந்தான். அப்போது மாலை நேரமாகி விட்டது. ஆகையால் திவான் கச்சேரியைக் கலைத்துவிட்டுத் தனது சொந்த மாளிகைக்குப் போவதற்காக வெளியில் புறப்பட்டு வந்தார். அவருடைய பெட்டி வண்டி ஆயத்தமாக வந்து நின்று கொண்டிருந்தது. அந்த வண்டிக்குப் பக்கத்தில் நமது சமயற்காரன் போய்த் தயாராய் நின்றான். கச்சேரிக்குள்ளிருந்து திவான் வெளிப்பட்டு வண்டியண்டை வந்தவுடனே, சமயற்காரன் நிரம்பவும் பய பக்தி விநயத்தோடு வண்டியண்டை ஓடி, அதன் கதவைத் திறந்து அதைப் பிடித்துக்கொள்ள, திவான் வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார். உடனே நமது சமயற்காரன் மறுபடி கதவை மூடித் தாளிட்டுவிட்டு வண்டியின் பின் பக்கத்திலிருந்த பலகையின் மேல் உட்கார்ந்து கொள்ள, உடனே வண்டி புறப்பட்டுச் சென்று கால் நாழிகை நேரத்தில் திவானுடைய மாளிகையை அடைந்து அதன் வாசலில் நின்றது. உடனே நமது சமயற்காரன் கீழே இறங்கி ஓடிவந்து கதவைத் திறந்து பிடித்துக்கொள்ள, திவான் கீழே இறங்கித் தமது ஜாகைக்குள் போய்விட்டார். மறுநாளைய காலையில் திவான் கச்சேரிக்குப் புறப்படும் சமயத்திலும், அது போல நமது சமயற்காரன் பாராக்காரன் போல உடையணிந்து வந்து ஆஜராய் நின்று வண்டியின் கதவைத் திறந்து மூடிவிட்டு, வண்டியில் உட்கார்ந்து அவருடன் கச்சேரிக்குச் சென்று, மாலையில் அதுபோலவே, அவரைத் தமது மாளிகையில் கொண்டு வந்து விட்டுச் சென்றான். இவ்வாறு மூன்று தினங்கள் கழிந்தன. நமது சமயற்காரன் திவானுடைய பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மூடும் உத்தியோகத்தைத் தானே வகித்து ஒழுங்காகச் செய்து வந்தான். திவானுடைய வண்டிக் கதவைத் திறந்து மூடுவதற்காக மகாராஜன் அந்தப் பாராக்காரனை நியமித்திருக்க வேண்டும்

41