பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

வாங்கி அதில் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை குத்தி உள்ளே அனுப்பத் தொடங்கினார். அதனை முதன் முதலில் பார்த்த திவான், அது யாரால் வைக்கப்பட்டதென்று தமது குமாஸ்தாவிடம் கேட்க, மகாராஜனால் நியமிக்கப்பட்ட ஒரு சேவகன் வாசலில் இருந்து அவ்வாறு முத்திரை போட்டு அனுப்புகிறா னென்று கூற, அதைக் கேட்ட திவான், அது அரசனது கட்டளையா யிருக்க வேண்டுமென்றும், ஏதோ முக்கியமான கருத்தை வைத்துக் கொண்டு அவர் அப்படி உத்தரவு செய்திருக்க வேண்டுமென்றும் யூகித்துக்கொண்டு அந்த முத்திரையை பெறாமல் தன்னிடம் யாரும் எந்தக் காகிதத்தையும் கொண்டுவரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அது போலவே, அரசனும், தன்னிடம் வரும் தபால்களில் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை இருந்ததைக் கண்டு, அது திவானினது உத்தரவினால் வைக்கப்படுகிறதென்றும், அவர் தமது இராஜாங்க நிர்வாகத்தை நிரம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கிறவர் என்றும் நினைத்து அந்த முத்திரை இல்லாத காகிதம் எதுவும் தன்னிடம் வரக்கூடாது என்று ஆக்ஞை செய்தார். ஆகவே, அரசனிடமும், திவானிடமும் ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கில் சென்ற விண்ணப்பங்களும், மற்ற காகிதங்களும் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை பெறுவதற்காக அவரது சுமுகத்தை எதிர்பார்க்கத் தொடங்கவே, தாம் வைக்கும் ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு காசு வரி என்று அவர் ஏற்படுத்தி, அதனால் ஒவ்வொரு நாளும் பொருள் திரட்ட ஆரம்பித்தார். பூலோக விந்தையென்ற அந்த ஊரிலுள்ள எல்லா மனிதரும் ஒருவர் பாக்கியில்லாமல் தமக்குப் பணம் செலுத்தும்படி தாம் செய்ய வேண்டுமென்பது அவரது கருத்தாதலாலும், தாம் அதுவரையில் செய்த ஏற்பாடுகளில் பலர் வரி கொடாமல் தப்பித்துக் கொண்டனராதலாலும், அவர் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த ஊரில் புதிதாகக் குழந்தை பிறந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வளவு வரி கொடுப்பது என்ற ஒரு புதிய உத்தரவு பிறப்பித்தார். அதை நிறைவேற்றி வைக்க ஏராளமான குமாஸ்தாக்களைக் கொண்ட ஒரு பெரிய இலாகாவை ஸ்தாபித்தார். அந்த இலாகாவும் திருப்திகரமாகவே வேலை செய்தது. ஆனால் அதிலும், அந்த ஊர் ஜனங்களில் சிலர்

46