பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

25

ஏறிக்கொள். பஸ்சில்தானே போகிறாய்? ஸ்டாண்டில் இறக்கி விட்டு விடுகிறேன்,” என்று அழைத்தார்.

அதற்கு வள்ளியம்மை, “இல்லேண்ணா, இப்படி குறுக்கு வழியா நான் நடந்து போயிடுவேன்... நீங்க புறப்படுங்க,” என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

அதற்கு மேலும் அவளை வற்புறுத்த முடியாமல், “இந்தா வள்ளி! இதை வைத்துக்கொள்,” என்று ஒரு பையை தனியாக அவளிடம் கொடுத்தார்.

அதில் நிறைய பலவிதமான பழங்களும் மத்தியில் ஒரு கட்டு நோட்டும் இருந்தன.

பையைப் பெற்றுக் கொண்ட வள்ளியம்மை, வழிச் செலவுக்கு என் கிட்டே பணம் இருக்கிறது அண்ணா,” என்று அந்த கத்தை நோட்டுகளை திருப்பிக் கொடுத்தாள்.

உடனே பரமகுரு, “வள்ளி! நீ இதை எடுத்துக் கொள்ளாவிட்டால், நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன்,” என்றார்.

“அவர் குணம் உங்களுக்குத் தெரியாதா அண்ணா?” என்று உருக்கமாகக் கூறினாள் வள்ளியம்மை.

“இதை நான் விஜயனிடம் கொடுக்கவா சொன்னேன் வள்ளி,” என்றார் பரமகுரு.