பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

29

காரிலிருந்து இறங்கிய எல்லோரையும் மாமாவும், மாமியும் வாசலில் நின்று வரவேற்றனர். பாபு ஒரு முறை அந்த அழகிய பங்களாவையும்; அதைச் சுற்றியுள்ள விசாலமான தோட்டத்தையும்; அதில் பூத்துக் குலுங்கும் மலர்களையும் ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்னர் அருணகிரியோடு உள்ளே நுழைந்து பார்த்தபோது, பாபு பிரமித்து போய் விட்டான். அதை ஒரு வீடு, பங்களா என்று சொல்லி அழைப்பதை விட, ஒரு சிறிய அரண்மனை என்றே சொல்லலாம்.

தரையிலும் சுவற்றிலும் விலை உயர்ந்த சலவைக் கற்கள் பதித்துப் பார்க்கும் இடமெல்லாம் பளபளப்பாய் இருந்தன. திரும்புகிற இடத்தில் எல்லாம் ஆள் உயர நிலைக் கண்ணாடிகள் கண்ணில் படுவோரையெல்லாம் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. தரையில் விரிக்கப்பட்டிருந்த அழகிய கம்பளம், மெல்லிய பூவின் மீது நடப்பதுபோல் இருந்தது. பல விருந்தினர் அறைகள். ஒவ்வொன்றிலும் விதம்விதமான அலங்கார மின் விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன.

இன்னும் எல்லா இடங்களையும் ஒரே மூச்சில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், “பாபு-அருணகிரி,” என்கிற அன்பான குரலை கேட்டு திரும்பினர்.