பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை
 

சைவத் திருமுறைகளுள் ஒன்றான பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் மாக்கதை பக்திக் காப்பியம் எனப் போற்றப் பெறுவதால் பலரால் நன்கு ஆழமாகப் படிக்கப் படுவதில்லை. பெயரில் அமைந்துள்ள 'புராணம்' என்ற சொல்லே சிலசமயம் கட்டுக் கதையோ என எண்ணத் தோன்றலாம். பெரிய புராணத்தைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்வியற் காப்பியம் ஆகும். இந்த நோக்கில் இதனை யாரும் பார்க்காத நிலையில் பேராசிரியர். உயர்திரு. அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் புதிய கண்ணோட்டத்துடன் பெரிய புராணத்தை ஆய்ந்து இந் நூலைப் படைத்துள்ளார்.


பெரிய புராணம், சைவ நாயன்மார்களின் உண்மை வரலாறு ஆகும். இதில் காணப்பெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பல்வேறு கல்வெட்டுகளாலும் வரலாற்று நிகழ்ச்சிகளாலும் உறுதி செய்யப் பெறுகின்றன. இந்த அளவு ஒரு வரலாற்றுக் காப்பியமாகப் படைத்திருக்கும் சேக்கிழார் பெருமானை என்றென்றும் போற்றுதல் வேண்டும்.


தமிழிலக்கியத்தைப் புதுப்புதுக் கோணங்களில் நோக்கித் திறனாய்வு செய்வதில் தலைசிறந்து விளங்குபவர் பேராசிரியர் அவர்கள். திறனாய்வுக் கலையைத் தமிழில் அறிமுகப்படுத்துவதற்காக ‘இலக்கியக் கலை’ யைப் படைத் தவர். கம்பராமாயணத்தை ஆய்வு செய்து ‘கம்பன் கலை’ படைத்தவர். இதே போக்கில் பெரிய புராணத்தையும் ஆய்வு செய்து பரந்து பட்டுக் கிடக்கும் பாரத நாட்டில் வாழும் எல்லா இன மக்களின் பிரதிநிதிகளாக உள்ள நாயன் மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் நூலாதலால் பெரிய புராணத்தைத் ‘தேசிய இலக்கியம்’ என்று துணிந்து எழுதி யுள்ளார்.