பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. நான்காண்டு “பி.இ.” கல்வியை
நாயுடு ஆறு வாரமாக்கினார்!

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”

என்று கூறுகின்றது தமிழர் மறையான பொய்யா மொழி எனப்படும் திருக்குறள் நூல்!

“மக்களாய் பிறந்தால் புகழுடன் பிறக்கக் கடவர், அந்தப் புகழ் இல்லாதவர் பிறத்தலினும் பிறவாமை நல்லது”. இந்தக் குறளுக்கு திருக்குறளார் முனுசாமி உரை கூறும்போது, “மக்களாய்ப் பிறந்தால் புகழ் உண்டாவதற்கான குணங்களோடு பிறத்தல் வேண்டும். அக் குணம் இல்லாதவர்கள் மக்களாகப் பிறப்பிதை விட பிறவா திருத்தலே நல்லதாகும்” என்கிறார்.

மக்களாகப் பிறப்பவர்கள் புகழ் உண்டாவதற்கான குணங்களோடு எப்படிப் பிறக்க முடியும்? பிறந்த பிறகுதானே அந்தக் குணங்களைப் பெற முடியும்? பரிமேலழகர் உரையை அடிப்படையாகப் பற்றுபவர்கள் திருக்குறளாரைப் போல குறளைப் பரப்பிக் கொண்டிருப்பதை விட, பேராசிரியர் சாலமன் பாப்பையா உரையே மேலானது. என்ன கூறுகிறார் திரு. பாப்பையா?

“பிறர் அறியுமாறு அறிமுகமானால், புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக. புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது” என்கிறார்.

எனவே, திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், ஒவ்வொரு துறையிலும் மற்றவர்கள் அறியுமாறு அறிமுகமாகும்போது, தனது செயற்கரிய செயல்களால், பெறற்கரிய அறிவுத் திறனைப் பெற்றுப் புகழ் மிக்கவராக அறிமுகம் ஆனார். இதுதான் உண்மை.