பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

123



மனிதப் புலியான இந்த நாயுடுவின் கொடுமை நிறைந்த குகைக்குள் சில வார காலம் பொறுமையோடு தங்கியிருந்து, சோதனையில் வெற்றி கண்ட உங்களை நான் பெரிதும் போற்றுகின்றேன்.

நாயுடு அவர்கள் உங்களிடத்தில் எவ்வளவு அன்போடு இருக்கிறார் என்பதை, அவர் உங்களை ஒரு பவுண்டு கூட எடை குறையாமல் பார்த்துக் கொள்கிறதிலிருந்தே தெரியவில்லையா? உங்களது பொருட்களை அவர் எவ்வளவு எச்சரிக்கையோடு கண்காணிக்கின்றார் என்று!

உங்களுடைய உணவு விடுதி பணியாட்களின் எடையைச் சோதித்துப் பார்ப்பதின் மூலம் தெரியவில்லையா? நண்பர் நாயுடுவை யாராலும் ஏமாற்ற முடியாது. அவர் ஓர் ஆண் சிங்கம். அவரைத் தவிர வேறு யாரும் மாணவர்களின் ஒழுக்கத்திலும், கட்டுப் பாட்டிலும் இவ்வளவு கவனம் செலுத்தி, விதி முறைகளைக் கண்டிப்பாக அமல் நடத்துவதாக எனக்குத் தெரியவில்லை!

நீங்கள் அவரிடம் பயிற்சி பெற்றதன் மூலம் யாருமே அடையாத இலாபத்தை அடைந்திருக்கிறீர்கள். அவருடைய உயர்ந்த பண்பு, உறுதியான உள்ளம், அஞ்சாத தன்மை, அசைக்க முடியாத குறிக்கோள் ஆகியவற்றை நீங்களும் பெற வேண்டும் என்பதே எனது தாழ்மையான ஆசை, என்றார்.

நாயுடுவின் கல்விக்
கொள்கைகள்!

திரு. நாயுடு அவர்களின் கல்விக் கொள்கைகள் சிலவற்றைக் காண்போம்:

'பாட திட்டத்தில் மாணவர்களுக்குத் தேவையற்ற பகுதிகள் எவ்வளவோ இருக்கின்றன. கலந்துள்ள அந்தப் பகுதிகளை நீக்கி விட்டுப் பாடங்களைச் சுருக்கமாகவும், இனிமையாகவும் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.

ஏட்டுப் படிப்பை எடுத்துவிட வேண்டும். நேரடிப் பயிற்சியாகவே எல்லா போதனைகளும் அமைய வேண்டும்.