பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



திரு.நாயுடு டாக்டர் அல்லர் என்றாலும், அவரது சித்த மருத்துவத்தின் நீண்ட வரலாற்றுப் புகழையும், மூலிகை மருந்துகளின் அருமையான இயற்கைச் சக்திகளின் பெருமையையும் எடுத்துரைத்த அவரது சிந்தனைத் திறத்தைப் பத்திரிக்கைகளில் படித்த எல்லா மருந்துவக் கழகங்களும் அவரைப் பாராட்டின.

ஜி.டி.நாயுடு அவர்களது நீரிழிவு மருத்துவ மருந்தின் அற்புதத்தையும், வெட்டை நோய்க்குக் கண்டு பிடிக்கப்பட்ட மருந்தின் திறமைகளையும் கண்டு, ஐரோப்பிய மெடிகல் அமைப்பும்.அந்தந்த நாடுகளின் கிளைக் கழக அமைப்புகளும் திரு நாயுடுவை அந்த மேடையிலே சந்தித்து, மருந்துகளின் பயன்பாடுகளை மேலும் விவரமாகக் கேட்டு அறிந்துகொண்டது மட்டுமின்றி, அந்த மருந்துகளைத் தங்களது நாடுகளுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.

சித்த வைத்தியப் பேராசிரியரான திரு.ஜி.டி.நாயுடு அவர்கள், நீரிழிவு, வெட்டை போன்ற வியாதிகளுக்குரிய மருந்துகளைக் கண்டுபிடித்ததோடு நில்லாமல், தனது நண்பர்கள் சகாக்களோடு மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மூலம் நோய்க்கும் PILES, ருமாட்டிசம் எனப்படும் மூட்டுவலி,கால்வலி, இருமல் போன்ற நோய்களுக்கும் உரிய மருந்துகளைச் சித்தா முறைப்படி கண்டு பிடித்தார்கள். அந்த மருந்துகளை மற்ற நாடுகளும் பெற்று நன்மை எய்திட வேண்டும் என்று ஐரோப்பிய பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தி விற்பனைக்கும் அனுப்பினார்கள்.

தமிழ்நாடு சித்தவைத்தியக் கழகம் என்றோர் அமைப்பு காவை நகரில் இருந்தது. அந்த அமைப்பில் ஜி.டி.நாயுடுவும் ஓர் ஆறுப்பினராக இருந்தார்.

சித்த வைத்திய முறையில் திரு.ஜி.டி.நாயுடுவுக்கு இருந்திட்ட மருத்துவ புலமையைக் கண்ட கழகப் பொறுப்பாளர்கள், ஜி.டி.நாயுடுவை சித்த வைத்திய மாநாட்டிற்கு அழைத்து, கோவை நகர் மக்கள் சார்பாக,சித்த வைத்தியப் பேராசிரியர் என்ற பட்டத்தை வழங்கிப் போற்றி மகிழ்ந்தார்கள். அதனால், கோவை மண் நாயுடுவைப் பெற்றதால் முப்போகம் விளையும் பொன் பூமியாக புகழில் விளங்கியது.