பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

155



நமது கல்லூரிகளில் படித்த பழைய மாணவர்கள், இப்போது பெருந்தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், நிர்வாகிகளாகவும் இருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் மற்ற அயல் நாட்டுத் தலைவர்களுக்குச் சமமாகவும், ஏன் அதற்கும் மேலாகவும் விளங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால், இப்பொழுது, சில சமயங்களில் நான் ஒன்றை உணர்கிறேன். அது, கல்வித் தரம் படிப் படியாகக் குறைந்து வருகிறது என்பது தான். அதற்குக் காரணம் நீங்கள் மட்டுமல்லர்: சூழ்நிலைகளும் ஆகும்.

சிறு குழந்தைகளுக்கு கல்வி அறிவூட்டும் சிறந்த பள்ளி இல்லம்தான். உயர்ந்த ஆசிரியர்கள் தாய் தந்தைகளே குழந்தைகள் வளர்கின்ற பொழுது அவர்களுக்கு நல்ல புகலிடம் கல்லூரியும், உணவு விடுதிகளுமே ஆகும். பெரும்பாலான மாணவர்களுக்கு வீட்டில் நல்ல பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம். பெற்றோர்கள் கல்வி அறிவற்றவர்களாக இருப்பதுதான்.

மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது, தம் பெற்றோரைவிடத் தாங்கள் சிறந்த அறிவாளிகள் எனவும், குடும்பத் தலைவர்கள் எனவும் நினைக்கத் துவங்கி விடுகிறார்கள். அப்பொழுதுதான் கட்டுப்பாடின்மை indiscipline ஏற்படுகிறது. அவர்கள் சுதந்திரமாகத் திரிவதாலும் சூழ்நிலைகள் மேலும் மோசமடைகின்றன.

நன்மை தீமைகளை இளம் உள்ளங்கள் ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்வதானால் அவர்கள் எப்படி உண்பது? எப்பொழுது உண்பது? எவ்வளவு உண்பது? எதை உண்பது? எப்பொழுது உறங்குவது? எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது? எப்படிப் பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இவற்றை எல்லாம் நாள்தோறும் செய்கிறார்கள், ஆனால் ஒமுங்கற்ற முறையில்!

மாணவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து, விளையாட்டிலும், திரைப்படங்களிலும், விழாக்களிலும், நாவல்களிலும், நேரத்தை வீணாக்குகிறார்கள்.