பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

159



1937-ஆம் ஆண்டுக்கு முன்பு நான் எந்தக் கல்லூரிக் குள்ளும் வேடிக்கைப் பார்க்கக் கூட நுழைந்தது கிடையாது. 1937-ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு கிறித்துவ மாநாடு நடைபெற்றது. அப்பொழுது நான் அங்கே இருந்தேன்.

ஊர்வலம் மிகப் பெரியதாக இருந்தது. ஆர்வத்தால் உந்தப்பட்டு அந்த நிகழ்ச்சிகளைச் சலனப் படம் பிடித்தேன். மற்றவர்கள் எடுத்தப் படங்களைவிட எனது படம் அருமையாக அமைந்திருந்ததால், சென்னை இலயோலாக் கல்லூரி முதல்வர் திரு. வரீன் என்பவர் அந்தப் படங்களை இலயோலாக் கல்லூரியின் திரையில் போட்டுக் காட்டும்படிக் கேட்டுக் கொண்டார்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட நான் கல்லூரிக்குள் சென்றேன். அதுதான் நான் எனது வாழ்க்கையில் கல்லூரிக்குள் நுழைந்த முதல் நிகழ்ச்சியாகும். அன்று நான் அங்கே படம் போட்டுக் காட்டினேன்.

ஆனால், அதற்கு முன் ஒரு விதியினை மாணவர்களை ஒப்புக் கொள்ளும்படி செய்தேன். அதாவது, அவர்கள் விரும்பும் மாநாட்டுப் படத்தை முதலில் போட்டுக் காண்பிப்பேன். அது முடிந்ததும், நான் விரும்பும் சில கல்விப் படங்களும் போட்டுக் காண்பிப்பேன். அதையும் அவர்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும். படம் முடியும் வரை யாரும் எழுந்து போகக் கூடாது என்று வலியுறுத்திக் கூறினேன்.

ஆசிரியர்களும், மாணவர்களும், எனது விதியை ஏற்றுக் கொண்டார்கள். மாலை 5 மணிக்கு துவங்கிய படக்காட்சி, இரவு ஒரு மணி வரை நடந்தது. இடையில் யாரும் சோறுண்ணக் கூட எழுந்திருக்கவில்லை. படம் தொடர்ந்து ஓடியது.

இரவு ஒரு மணிக்குப் பார்வையாளர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். கல்லூரி முதல்வரும், ஒன்றிரண்டு மாணவர்களும் தவிர, மற்ற அனைவரும் தமது நாற்காலிகளிலேயே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மேலும் நான் சோதிக்க விரும்பாததால், படக் காட்சியை அத்துடன் முடித்துக் கொண்டேன். அன்றுதான் கல்லூரி என்றால் என்ன என்பதை பற்றி நான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்.