பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



அருமை மாணவர்களே! நான் உங்களுடைய கல்லூரியில், தமிழ் மொழியைப் பற்றி ஆங்கிலத்தில் பேசுகிறேன். அந்த நிலை எனக்கு ஏற்பட்டு விட்டதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

நான் தமிழில் பேசினால், நீங்கள் மட்டுமே அறிய முடியும். ஆனால், ஆங்கிலத்தில் நான் பேசினால், பின்னர் இப் பேச்சை வெளிநாட்டாரும் அறிய வாய்ப்பு உண்டாகும்.

நான் இளமைக் காலத்தில் தமிழ்மொழியில் அளவு கடந்த பற்று வைத்திருந்தேன். காலப் போக்கில் எனக்கு அதனோடு தொடர்பு குறைந்தது. தமிழ்தான் உலகத்திலேயே முதன் முதலில் தோன்றிய மொழி. அதுதான் மற்ற எல்லா மொழிகளுக்கும் பிறப்பிடம். அது நல்ல இலக்கிய வளம் உடைய மொழி என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

இந்தக் கருத்தை நான் அமெரிக்காவில் 1940-ஆம் ஆண்டில் நடந்த பல பொதுக் கூட்டங்களிலே பேசும்போது வலியுறுத்திக் கூறியுள்ளேன். அந்தச் சொற்பொழிவின் சில பகுதிகள் சர்விசஸ் அண்ட் சேல்ஸ் என்ற அமெரிக்கப் பத்திரிக்கையில் 1940-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இதழில் வெளி வந்துள்ளன.

ஆனால், தமிழில் உள்ள ஒரே ஒரு குறை. அதில் ஏராளமான ஆபாசக் கருத்துக்கள் கலந்து விட்டன என்பதேயாகும். நீங்கள் தமிழைக் கற்கும்போது, தீயவற்றை நீக்கி - நல்லவற்றையே கற்க வேண்டும். தமிழில் மிகச் சிறந்த அறநூல்கள் இருக்கின்றன. அத்தகைய அற நூல்களை நீங்கள் உலகின் வேறு எந்தமொழியிலும் காண முடியாது.

நான் ஆங்கிலமும், சில வட இந்திய மொழிகளும் பயின்றுள்ளேன். எனக்குத் தெரிந்தவரை, தமிழ், மனித குலத்தின் அறப் பண்பை வளர்க்கும் ஓர் அரிய மொழியாகும். ஆனால், நீங்கள் தமிழோடு அமையாது, ஆங்கிலத்திலும், நல்ல புலமை பெற வேண்டும். விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவை ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. நான் உங்களுக்குக் கூற விரும்புவது தமிழில் பற்றும், ஆங்கிலத்தில் புலமையும் பெற்று நாட்டை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.