பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. கதர் சிறந்ததா? மில் துணி சிறந்ததா?
தந்தை பெரியார் - நாயுடு போட்டி!

ஒரு முறை தந்தை பெரியாரும், பிற்காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட இரா. நெடுஞ்செழியனும், கோவை இரயில் நிலையத்தில் சென்னை மாநகர் போகும் இரயில் நிற்கும் நடை மேடையில், அதாவது பிளாட் பாரத்தில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரா. நெடுஞ்செழியன் தந்தை பெரியாரிடம் நெருக்கமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்குப் பிறகுதான் இரா. நெடுஞ்செழியன் இளம் தாடியை வைத்துக் கொண்டு, இளம் தாடி பெரியார் என்று மக்கள் அவரை அழைக்கும் வகையில் தோற்றமளித்தார். தனது நா வன்மையை தமிழர் மத்தியில் நிலை நாட்டிடும் சொற்பொழிவாளர் ஆனார்.

'நா' வன்மை உடைய நெடுஞ்ழியன் உரைகள், கோடை இடி போல் திராடர் இயக்கத்தின் சுயமரியாதைக்குரிய தன்மான உணர்வுகளை மழையாகப் பொழிந்தார். அதனால், அவரைத் திராவிட இயக்கக் கண்மணிகள் நாவலர் நெடுஞ்செழியன் என்று மதித்து மகிழ்ந்தார்கள்.

அந்த நெடுஞ்செழியனும் - தந்தை பெரியாரும் தான் சென்னை வருவதற்காக, கோவை இரயில் நிலைய நடை மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கோவை தொழிலியல் விஞ்ஞானி என மக்களால் போற்றப்பட்ட திரு. நாயுடு அவர்கள், சென்னைக்குப் போவதற்காக, அதே இரயில் வண்டியின் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடை மேடைக்கு வந்தார்.