பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



தந்தை பெரியாரும் - இரா. நெடுஞ்செழியனும் அந்த நடை மேடையில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஜி.டி. நாயுடு அவர்கள், "நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று தந்தை பெரியாரைக் கேட்டார்.

அதற்கு பெரியார் அவர்கள், சென்னைக்குப் போகிறோம், என்றதும், 'எந்த வகுப்புக்கு டிக்கெட் வாங்கி இருக்கிறீர்கள்? என்று நாயுடு கேட்டார்.

'நாங்கள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யப் போகிறோம்', என்று பெரியார் கூறியதும், "நான் முதல் வகுப்பில் போகிறேன். நீங்களும் முதல் வகுப்பில் வாருங்கள் போவோம்' என்று கூறி விட்டு, இரண்டு பேர்களுக்கும் உரிய முதல் வகுப்புப் பயணச் சீட்டுக்குரிய கட்டணத்தைச் செலுத்தி, இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுக்களை நாயுடு அவர்கள் சென்று வாங்கி வந்து தந்தை பெரியாரிடம் கொடுத்து விட்டு, அவருக்காக ரிசர்வ் செய்து வைத்திருந்த முதல் வகுப்புப் பெட்டியில் நாயுடு ஏறி உட்கார்ந்து கொண்டார்.

உடனே தந்தை பொரியார் அவசரம் அவசரமாக நெடுஞ் செழியன் அவர்களிடம் அந்த இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்து, இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுகளையும் வேண்டாம் என்று ரத்து செய்து விட்டு, மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இரண்டை வாங்கிக் கொண்டு, மீதி பணத்தையும் பெற்றுக் கொண்டு ஓடி வரும்படி கூறி விட்டு, தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்து விட்டார்.

அதற்குள் வேகமாய் ஓடிய நெடுஞ்செழியன் டிக்கெட்டு களையும், மீதி பணத்தையும் வாங்கிக் கொண்டு, ஓடி வந்து அய்யாவுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

கோவை விரைவு இரயில் வண்டி சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்து நின்றதும். ஜி.டி. நாயுடு அவர்கள் பெரியார் ஏறிய முதல் வகுப்பு பெட்டித் தொடர் வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து காத்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரும் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலே இருந்து இறங்குவதைக் கண்ட ஜி.டி. நாயுடு, 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று செல்லக் கோபமாய் பெரியாரைக் கேட்டார்.