பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


மனித நேயம் உடையவர், அப்படிப்பட்ட அவர், இந்திய மக்களின் வறுமைக் கண்ணிரைத் துடைத்திட அரும்பாடு பட்டுள்ளார். சுருக்கமாச் சொல்வதானால் நாயுடு அவர்கள், ஆயிரத்துள் ஒருவரல்லர், பத்து இலட்சத்துள் ஓர் அரிய மனிதர்!

நான் கூறுவதுகூட, அவரது திறமைக்கு பொருத்தமான, புகழுக்கு ஈடான கூற்றும் ஆகாது என்று 09.04.1950 - அன்று ஜி.டி. நாயுடுவைப் பற்றி பேசியுள்ளார்.

அதே சர்.சி.வி. இராமன் அவர்கள் வேறோர் நிகழ்ச்சியில் நாயுடுவுக்குப் புகழாரம் சூட்டும்போது :

'ஜி.டி. நாயுடு ஒர் அதிசயமான மனிதர். அவர் பள்ளிக்குச் சென்று, கல்வி கற்றவரல்லர். ஆனால், நாமெல்லாம் வியக்கத் தக்க அளவுக்கு அவரிடம் சாதனை அறிவு நிறைந்திருக்கின்றது.

எல்லாத் தொழில் நுட்பங்களையும் அவர் அறிந்திருக்கிறார். நான் அவருடைய கல்லூரி உணவு விடுதிக்கும் சென்று பார்த்தேன். அப்போது மாணவர்களில் ஒருவர் என்னிடம், "எப்படி ஐயா நீங்கள் வைரத்தில் துளை போடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"அதைச் சரியாக அறிவிக்க எனக்கு நினைவு வரவில்லை. உடனே நாயுடு அவர்கள் அந்த முறையைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதை நான் கேட்டதும் அயர்ந்து போனேன்".

"கோவை மக்கள் இப்படிப்பட்ட ஒரு மனிதரைத் தம்மிடையே பெற்றிருக்கப் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். நாயுடு அவர்கள் சிறந்த அறிஞர் மட்டுமல்லர் அமெரிக்கர்கள் கடைப்பிடிக்கும் "அறிவது எப்படி?" How to Know என்ற கொள்கையையும் உடையவர்".

ஏதாவது ஒரு பொருளை அவர் பார்த்துவிட்டால், அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அற்புத சுபாவம் உடையவர். நம் நாட்டு மக்கள் ஒரு வேலையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி விளக்கமாகச் சொற்பொழிவு ஆற்றுவர். ஜி.டி. நாயுடு அதற்கு விதி விலக்கானவர்.