பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

19


பரிதாபத்தால், அதே கோவை மாவட்டத்திலே இருந்த தனது தாய் மாமனான இராமசாமி என்பவரின் ஆதரவோடு இலட்சுமி நாயக்கன் பாளையம் என்ற ஊரில் துரைசாமி வளர்ந்து வந்தார்.

பள்ளிக்குச் செல்லும் பருவம் வந்ததும், துரைசாமியைத் தாய் மாமன் இராமசாமி, அங்கே இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் கல்வி கற்கச் சேர்த்து விட்டார்.

பள்ளி வாழ்க்கையை துரைசாமி வெறுத்தார். அவரை அன்புக் காட்டிப் பள்ளிக்கு அனுப்புவார் யாருமில்லை. தாயில்லாப் பிள்ளை அல்லவா? அதனால் அவர்மீது அன்பு காட்டுவார் யாரும் இல்லை.

வீட்டில் எப்படிக் குறும்புத்தனம் செய்து வந்தாரோ, அதே அரட்டைகளையும், சச்சரவுகளையும் வீட்டிற்கு வெளியிலும், பொதுவாக அந்தக் கிராமத்திலும், இராபர்ட் கிளைவைப் போலச் செய்வதையே பழக்க வழக்கமாகக் கொண்டிருந்தார் - துரைசாமி!

இந்தத் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே, அந்தக் குழப்பங்களைத் தடுக்கவும், நிறுத்தவும் - அவருடைய தாய் மாமன் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பியும்கூட, அதே உபத்திரவங்கள் மேலும் தொடர்வதால் ராமசாமிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தாயில்லாப் பிள்ளையை என்ன செய்வது, எவ்வாறு அவரை முன்னேற்றுவது என்பதிலே அக்கறை கொண்டு சிந்தனை செய்தார் - தாய் மாமன்!

சிறுவன் துரைசாமி பள்ளிக்குச் சென்றாரே ஒழிய, அவர் குறும்புத்தனங்கள் குறைந்தபாடில்லை. பள்ளியில் உள்ள மற்றப் பிள்ளைகளுக்கும் அவரால் துன்பங்கள் அதிகமாயின.

அதனால், திண்னைப் பள்ளி ஆசிரியர் பிரம்பால் அடிக்கும்போது மட்டும் துரைசாமி சற்று பணிந்தாரே தவிர, பிறகு அதே குறும்புகளை அடாவடித்தனமாக, தன்னையறியாமலேயே செய்யும் சூழ்நிலை பள்ளிப் பிள்ளைகளால் அவருக்கு உருவானது.

இந்த பள்ளி இடையூறுகளுக்கு இடையிலும், சிறுவன் துரைசாமி அதே பள்ளியில் மூன்றாண்டுகளைக் கழித்து வந்த போது, அவர் தமிழ் மொழியை ஓரளவுக்குப் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டார், கணக்குப் போடுவதிலும் சிறந்து விளங்கினார்.