பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


என்னதான் குறும்பனாக இருந்தாலும், துரைசாமி தமிழ்ப் பாடத்திலும், கணக்குப் போடுவதிலும் மற்ற பிள்ளைகளைவிட, வல்லவனாக இருப்பதைக் கண்ட திண்ணைப் பள்ளி ஆசிரியருக்கு: அந்தச் சிறுவன் துரைசாமி மீது தனியொரு மதிப்பும், மரியாதையும், அன்பும் வளர்ந்து வந்ததது. அதனால், சில நேரங்களில் அந்தச் சிறுவன் செய்யும் துஷ்டத் தனங்களையும் மன்னித்துக் கருணைக் காட்டி வந்தார்.

சிறுவன் துரைசாமிக்குத் திண்ணைப் பள்ளி வாழ்க்கை வெறுப்பை வளர்த்தது. இந்தப் பள்ளியை விட்டு எவ்வாறு வெளியேறுவது என்பதில் அந்தப் பையன் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

ஒரு நாள் ஆசிரியர் துரைசாமியிடம் ஒரு பாட்டை மனனம் செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால், அச் சிறுவன் தனது விளையாட்டுத் தனத்தால் பாட்டை மனப்பாடம் செய்யாமல் போகவே, ஆசிரியர் பிரம்பைக் கையில் எடுத்ததும், துரைசாமிக்கு எதிர்பாராமல் ஆசிரியர் மீதே கோபம் வந்து விட்டது.

திண்ணைப் பள்ளி அல்லவா? அதன் சுவற்றோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த - பரப்பி வைக்கப்பட்டிருந்த மணலை இரு கைகளாலும் வாரி ஆசிரியர் கண்கள் மீது வீசியெறிந்து விட்டு ஓடி விட்டார்.

ஆசிரியர் தனது கண்களை ஊதித் துடைத்துக் கொண்டு, இனி துரைசாமி வந்தால், பள்ளியில் உட்கார வைக்க வேண்டாம் என்று மற்ற மாணவர்களிடம் கூறினார்!

அதற்குப் பிறகு, துரைசாமியும், அந்தப் பள்ளிக்கு வராமல் நின்று விட்டார். பள்ளிப் படிப்பு வாழ்க்கையும் அன்றோடு முடிந்தது.

துரைசாமி மணலை வாரி வீசிய சம்பவத்தை அவனுடைய தாய் மாமன் ராமசாமியிடம் வீடு தேடிப் போய் பள்ளி ஆசிரியர் கூறவே, துரைசாமியால் உண்டாகும் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல், அவனைத் தேடி அலைந்து கண்டுபிடித்து அவன் தந்தையிடமே ஒப்படைத்து விட்டார்.