பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

25


அவ்வளவுதான்! துரைசாமி அந்த தட்டானிடம் ஓடி, அந்தத் தங்கக் கம்பியைப் பிடுங்கிக் கொண்டு, தனது பட்டத்துக்கு அதைக் கயிறாகக் கட்டிக் காற்றில் பறக்கவிட்டார் காற்றாடியை!

‘காற்றாடி விட்ட ஆசை தீர்ந்ததும், பட்டத்தை அந்தப் பையனிடமே கொடுத்து விட்டு, தங்கக் கம்பியைத் தட்டான் இடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, அதற்கு நன்றியையும், அவர் சொல்லி விட்டுத் தனது தோட்டத்துக்குத் திரும்பி வந்தார்.

துரைசாமி தனது ஓய்வு நேரத்தில் ஊரைச் சுற்றி வருவார். தனக்கு வேண்டிய நண்பர்களைப் பார்த்துப் பேசிவிட்டு, கற்க வேண்டிய நூல்களை நண்பர்களிடம் பெற்றுக் கொண்டு தோட்ட வீட்டுக்கு அவர் வருவது வழக்கம்.

ஒரு நாள் இவ்வாறு நண்பர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பி, வரும்போது, வழியில் ஒரு காலி பாட்டல் அவருக்குத் தென்பட்டது. அதை எடுத்துப் பார்த்தார். அந்தக் காலி புட்டி மீது 'பார்க் டேவிஸ்" - என்ற நிறுவனம் தயாரித்த ஒரு வலி நிவாரணி Pain Killer என்ற மருந்துள்ள பாட்டல் என அச்சிடப்பட்டிருந்தது. அந்த நிவாரணியைத் தயாரித்த நிறுவனத்தின் அமெரிக்க முகவரியும் அதில் இருந்தது. அந்தக் காலிப் பாட்டலைக் கொண்டு வந்து அவர் பாதுகாத்து வைத்திருந்தார்.

அமெரிக்க மருந்துக்கு :
ஏஜெண்டானார்!

கலங்கல் கிராமத்திற்கு அரசு வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் வந்தார். அவரிடம் அந்த மருந்து பற்றிய விவரங்களைத் துரைசாமி கேட்டு அறிந்தார். அந்த நேரத்தில், அக் கிராம மக்களில் பலர் தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி போன்ற பல வலி நோய்களால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஊர் மக்கள் பலர் வலிகளால் வருந்துவதை உணர்ந்த துரைசாமி, அந்த வருவாய் துறை அதிகாரியைப் பயன்படுத்தி, அமெரிக்க வலி நிவாரண நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி அந்த மருந்தை வரவழைத்தார்.