பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'3. நம்பிக்கை, நாணயம், நேர்மை;
‘நா’, நலம்; அறம் பிறழா-நெஞ்சர்!

ஏறக்குறைய, தொன்னூறு ஆண்டுகட்கு முன்பு, மோட்டார் போல டபடபா, பட்பட் என்ற ஒசைகளோடு ஓடும் மோட்டார் சைக்கிளை நகரங்களில் பார்க்கின்ற மக்களுக்கே வியப்பாக விளங்குவது உண்டு என்றால், கிராமத்து மக்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்குத்தான், அந்த மோட்டார் சைக்கிளின் அருமையையும், அதைக் கண்டு பிடித்தவரின் பெருமையையும் நாம் உணர முடியும்.

இந்த மோட்டார் சைக்கிளின் ஒலியை ஒருநாள் துரைசாமி தனது ஊர் சாலையில் கேட்டு விட்டுப் பிரமித்து நின்று விட்டார். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஓர் இங்கிலாந்துக்காரர்: பெயர் லங்காஷயர்!

அந்த இங்லிஷ்காரர். அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியிலே பணியாற்றியவர். நிலங்களை அளந்து வகைப்படுத்தும் துறையில் பணிபுரிந்த அதிகாரி அவர். கோவை மாவட்டத்தில், கலங்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள சில ஊர்களில் உள்ள இடங்களை அந்த மோட்டார் சைக்கிள் மூலமாகச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரும் வழியில் கலங்கல் கிராமம் மார்க்கமாக வந்தார்.

அந்தச் சமயத்தில்தான் துரைசாமி அந்த மோட்டார் சைக்கிள் எழுப்பும் ஓசையையும் பட படப்பையும் முதன் முதலாக, நேரில் கண்டார்.

முதன் முதல் பார்த்த :
மோட்டார் சைக்கிள்!

துரைசாமி நடந்து வந்த பாதையில், அந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது. லங்காஷயர் கீழே இறங்கி இஞ்சினில் என்ன பழுது என்று அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.