பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

31


போக்கிக் கொண்டார்! நல்ல உணவு கிடைத்ததால், ஏற்றுக் கொண்ட பணியை தனது முதாலளி மனம் கோணாமல் செய்து வந்தார், வேளா வேளைக்குரிய நல்ல சாப்பாடும், இடையிடையே போதிய ஒய்வும் கிடைத்து அதனால், கோவை நகரைச் சுற்றிவரும் வாய்ப்பும் அவருக்கு உண்டானது.

என்ன வியாபாரம் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் துரைசாமிக்கு உதயமாயிற்று. காரணம், ஏற்கனவே பருத்தி வியாபாரத்தில் தந்தையுடன் ஈடுபட்ட அனுபவத்தால், வியாபாரம் செய்யலாமே என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

இடையிடையே அவருக்குத் தோன்றிய சில சில்லறை வியாபாரங்களைச் செய்தார். இவ்வாறு ஆண்டுகள் மூன்று உருண்டோடின. தனது செலவுகள் போக 400 ரூபாயைத் துரைசாமி சேர்த்து வைத்திருந்தார்.

இந்த நான்கு நூறு ரூபாயோடு, கலங்கல் கிராமத்தில் தான் சந்தித்த வருவாய்த் துறை அதிகாரியான லங்காஷயரைக் கோவையில் தேடிக் கண்டு பிடித்துவிட்டார். அப்போது, அந்த வெள்ளைக் காரர், செட்டில் மெண்ட் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை :
விலைக்கு வாங்கினார்!

ஒரு நாள் காலை, லங்காஷயர் வீட்டுக்குச் சென்ற துரைசாமி, அவரிடம் 400 ரூபாய் பணத்தைக் கொடுத்து. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார். அந்த வெள்ளையர் துரைசாமியின் ஆசையையும் - ஆர்வத்தையும் கண்டு தனது மோட்டார் சைக்கிளை அவருக்கு விலைக்குக் கொடுத்து விட்டார்.

மோட்டார் சைக்கிளைப் பெற்றுக் கொண்டு வந்த துரைசாமி, தான் தங்கியிருந்த வீட்டின் முன் புறத்தில் உள்ள தனது வாடகை அறையில், அந்த வண்டியைப் பாகம் பாகமாகப் பிரித்தார். மறுபடியும் அவற்றை அந்தந்த இடத்திலேயே கவனமாகப் பூட்டினார்.