பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

35


நண்பரிடம் பேச்சை முடிக்காமல் முதலாளி இருந்தபோது, துரைசாமி கூறிய வார்த்தையைக் கேட்டுத் திகைத்தார்! ஆனால், துரைசாமி எதுவும் எசமானரிடம் அதற்கு மேல் சொல்லாமல் விர்ரென்று சென்று விட்டார்.

சிங்கா நல்லூர் பருத்தி ஆலையில் துரைசாமி பெற்ற அனுபவத்தைக் கொண்டு திருப்பூர் நகரில் சொந்த பருத்தி ஆலை நடத்துவது என்ற முடிவுக்கு துரைசாமி வந்தார். ஆலை என்றால் அதற்கான இடம், பணம் வேண்டுமல்லவா?

மூடநம்பிக்கையைத் :
தகர்த்த வாலிபர்!

தனது நண்பர்களிடம் தேவையான பணம் பதினேழு ஆயிரம் ரூபாயைத் துரைசாமி கடனாகப் பெற்றார். ஆலை அமைக்க இடம் எங்கே கிடைக்கும் என்று தேடினார். கிறித்துவப் பாதிரியாருக்குச் சொந்தமான ஓர் இடம் விலைக்கு வந்தது. அக் காலக் கிறித்தவர்களிடம் ஒரு பாவம் குடி கொண்டிருந்தது. என்ன அது தெரியுமா? கிறித்தவப் பாதிரிமார்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்க மாட்டார்கள். அதில் வீடு கட்டி இந்துக்கள் குடியேறவும் மாட்டார்கள். அதாவது, அது பாவச் செயல் என்று மக்களால் எண்ணப்பட்டதே அதற்குக் காரணமாகும்.

ஆனால், துரைசாமி இது மாதிரியான மூட நம்பிக்கைக் கொள்கைகளை எல்லாம் தூக்கி எறிபவர். அதனால், அந்தக் கிறித்துவப் பாதிரியின் இடத்தை விலைக்கு வாங்கினார். நகராண்மைக் கழகத்தின் அனுமதி இல்லாமலேயே ஆலைக்குரிய கட்டடத்தைக் கட்டினார்.

நகராட்சி அதிகாரிகள் துரைசாமி மீது வழக்குத் தொடுத்தார்கள். கட்டடம் முடியும் வரை அவர் அதிகாரிகளுக்குத் தெரிந்தும் - தெரியாமலும் காலம் கடத்தி வந்தார். கட்டடமும் முடிந்தது. அதே நேரத்தில் நகராட்சியிடம் அனுமதியும் பெற்றுவிட்டார். பருத்தி ஆலையும் நடக்கத் தொடங்கியது. இவையெல்லாம், துரைசாமியின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தொழில் வியூகமாக விளங்கியது.