பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


அன்று, பன்னிரண்டே பேர்கள் தான் விடுமுறை எடுத்திருந்தார்கள். காரணம், கூறாமல் நின்றிருந்தவர்கள் ஆறே ஆறு பேர்கள்தான். குறித்த நேரம் தவறித் தாமதமாக வந்த பணியாளர்கள் இரண்டே பேர்கள்தான்.

உடல் நலமற்றோர்
பணி செய்தால் அபராதம்!

இதற்கடுத்தபடி, நாயுடு அவர்கள் மீண்டும் ஆறு மாதம் கழித்து தொழிலாளர் வருகையைக் கணக்கெடுத்துப் பார்த்தார். அன்று விடுமுறை எடுத்தவர்கள் இரண்டு பேர்கள், காரணம் கூறாமல் நின்றவர் ஒரே ஒரு தொழிலாளிதான் தாமதமாகப் பணிக்கு வந்தவர்கள் யாரும் இல்லை. இந்தச் சீர்திருத்தத்திற்குப் பிறகு நாயுடு அவர்கள் புது உத்தரவு ஒன்றைப் புகுத்தினார் என்ன அது?

உடல் நலம் இல்லாதவர்கள் யாராகிலும் தொழிலுக்கு வந்து பணியாற்றினால், அவர்களுக்கு தலா பத்து ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதே அந்த புது உத்தரவாகும்.

இந்த உத்தரவால் நாயுடு அவர்களின் தொழிலாளர் அபிமானம் எவ்வளவு போற்றத் தக்கதாக இருந்தது பார்த்தீர்களா? இந்தப் புது கட்டளையைக் கண்ட எல்லாத் தொழிலாளர்களும் தங்களது முதலாளியைத் தெய்வமாக மதித்து வந்தார்கள்.

வேலை நிறுத்தமே
இல்லாத நிறுவனம்!

தொழிலாளர்கள் மீது திரு. நாயுடுவுக்கு இருந்த மதிப்பும் - மரியாதையும் ஒரு புறமிருக்க, அதே நேரத்தில் பணியாளர்களிடம் குறை கண்டால் - கண்டிப்பும், நிறை கண்டால் - பாராட்டும் வழங்கி வந்ததையும் அந்தத் தொழிலாளர்கள் மறக்கவில்லை.

இத்தகைய உத்தரவுகளால்தான் அவருடைய யு.எம்.எஸ். நிறுவனம் திறமையாகவும், சிறப்பாகவும், பார்ப்பவர்களுக்கு வியப்பாகவும் விளங்கி வந்தது எனலாம். எந்த நேரத்திலும் அந்த நிறுவனத்தில் வேலை நிறுத்தம் என்பதே நடந்ததில்லை.

யு.எம்.எஸ். நிறுவனத்தில் ஏறக்குறைய ஓர் இலட்சம் கோப்பு கள் இருந்தன. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பணிக்கும்