பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

49


ஃபைல்களைப் போட்டு அதைக் கவனமாகக் கண்காணிக்கும் கடமையை அலுவலக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருந்தார் ஜி.டி. நாயுடு.

அவ்வாறு, ஏறக் குறைய ஓர் லட்சம் கோப்புகளை யு.எம்.எஸ். நிருவாகம் கவனித்துக் கொண்டு கடமையாற்றியது. திடீரென இந்தக் கோப்புகள் மீது கவனம் வந்தது திரு. நாயுடுவுக்கு.

ஓர் இரவு நாயுடு அவர்கள், தனது நிறுவனச் செயலர்கள் எவ்வாறு கோப்புக்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு செயலாளர் மேசைகளையும் கவனித்துக் கொண்டே வந்தார்.

கோப்புகளை எப்படி
நிருவாகம் செய்வது?

ஒரு மேசையில் கோப்புகள் கிழிந்த நிலையில் தரையிலே கிடந்ததைக் கண்டார் திரு. நாயுடு. வேறொரு மேசையில் கோப்புகள் அலங்கோலமாகச் சிதறிக் கிடந்தன. இன்னொரு மேசையில் பிரித்துப் பார்த்தக் கோப்பை அப்படியே விட்டுவிட்டுச் சென்றக் காட்சியைக் கண்டார்.

ஜி.டி. நாயுடு அவர்கள், அந்தந்தக் கோப்புக்களை அடுக்கி அந்தந்த மேசைகள் மேலே வைத்தார். அலங்கோலமாக இருந்தவை களைச் சரி செய்து வைத்தார். பிரிந்துக் கிடந்தவைகளை மூடி அதே மேசையிலேயே வைத்துவிட்டார். குப்பை போலக் குவிந்துக் கிடந்த கோப்புக்களை ஒவ்வொன்றாக அடுக்கி, அதை ஒரு கயிற்றால் கட்டி அதே மேசை மேலேயே வைத்தார்.

ஒரு துண்டுச் சீட்டை எடுத்து, “அவரவர் மேசைகளைச் சம்பந்தப்பட்டவர்கள், சுத்தமாகவும் - ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது. உங்களுடைய முதலாளியைத் தினந்தோறும் இரவில் வந்து அடுக்கி, கட்டி வைக்கச் சொல்கிறீர்களா?” என்று அந்தச் சீட்டில் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் திரு. நாயுடு.

மறுநாள் அந்தந்த மேசை அலுவலர்கள் பணிக்கு வந்து அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்து அதிர்ச்சி பெற்றார்கள்.