பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

61


சென்றார். அந்தந்த நாடுகளில் நடக்கும் மோட்டார் தொழிலின் புதுமைகளை, முன்னேற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு. அவற்றை எல்லாம் தனது மோட்டார் தொழில் வளர்ச்சிக்குரிய சிந்தனைப் பலமாக்கிக் கொண்டார் திரு. நாயுடு அவர்கள்.

தமிழ்நாடு திரும்பியவர் :
வளர்ச்சிக்கு வழிகாட்டினார்!

1932-ஆம் ஆண்டு ஜி.டி. நாயுடு அவர்கள், தனது முதல் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டவர். 1933-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அவர் சென்று வந்த நாடுகளின் தொழில் முன்னேற்ற வளர்ச்சிகளை, யு.எம்.எஸ். மோட்டார் கூட்டுறவிலுள்ள சிறுசிறு முதலாளிகளுக்கும், தனக்குக் கீழே பணியாற்றிடும் யு.எம்.எஸ். தொழிலாளர்களுக்கும் விவரமாக எடுத்து விளக்கி, நமது நாடும் தொழிற்துறையில் முன்னேற வேண்டும் என்பதை விவரித்தார்!

உலக நாடுகளில் தொழிற் துறை முன்னேறிட அங்கங்கே அடிப்படைக் காரணங்களாக இருப்பவர்கள் தொழிலாளர்களும், அவர்களது முழு உழைப்புகளும்தான் என்பதை விளக்கி, தமிழகத் தொழிலாளர்களும் அந்தச் சிறப்பைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஜி.டி. நாயுடு அவர்கள், எக்ஸ்டர் (Exeter) என்ற நகரத்திலே இருந்து இலண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பே, அவர் ஒரு குறிப்பிட்ட புகை வண்டி இரயிலுக்கு ஒரு பயணச் சீட்டுப் பெற்று, அதை 'ரிசர்வ்' செய்து வைத்திருந்தார்.

அந்த இரயில் வண்டி ஒடிக் கொண்டிருந்தபோது, இடையில் ஒரு பெரிய விபத்துக்கு உள்ளானது. அதனால், உயிரிழந்தோர் அதிகம் பேர்கள் ஆவர். படுகாயமடைந்தவர்களும் பற்பலர்.

அந்த இரயில் வண்டி விபத்துக்குள்ளானதைப் பத்திரிக்கையில் படித்த ஜி.டி. நாயுடு அவர்களின் நண்பர்கள், விபத்து நடந்த குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தோடினார்கள் - தேடினார்கள் நாயுடு அவர்களை காணவில்லை.