பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

67


வகைகளை வழங்குங்கள் என்று பத்து நிமிடத்துக்கு ஒரு முறையாக நாவலர் நெடுஞ்செழியன் என்ற அமைச்சர் கேட்டுக் கொண்டும் கூட, யாரும் கடை திறப்புகளைச் செய்யவில்லை. காரணம், அவர்களும் மனிதநேயர்கள்தானே! எப்படிச் செய்வார்கள் வியாபாரம்? செய்யத் தான் முடியுமா மக்கட் கடலுக்குள்?

அண்ணா சவ உடல் இராஜாஜி மண்டபத்தில் வைக்கப் பட்டது. இரவெல்லாம் மக்கள் வரிசை வரிசையாக, சாரி சாரியாக நின்று அவரது மரணக் கோலத்தைக் கண்டு, கண்ணிராபிஷேகம் செய்து கொண்டே நகர்ந்தார்கள் - ஆமைகள் கூட்டம் போல!

நேரம் ஆக ஆக மக்கட் கூட்டம் பெருகியது! இவ்வளவு மக்களும் உண்ண, உறங்க, தண்ணி குடிக்க வழியின்றித் தவித்துச் சாலைகள் நடுவே எல்லாம் குப்பைக் கூலங்கள் போல படுத்துக் கிடந்தார்கள்!

அண்ணா முகத்தையாவது பார்க்கலாமே என்ற பாமர மக்களது பாசம், சென்னை வரும் இரயில் வண்டியின் கூரை மேலே ஏறி அமர்ந்தார்கள். இரயில் கூரை மேலே அமர்ந்து வந்து கொண்டிருந்த மக்கள் தஞ்சை - விழுப்புரம் இடையே அருகே இருந்த கெடிலம் ஆறு இரும்புப் பாலக் கூரையால் தாக்கப்பட்டு, ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட, துடிதோடு துடித்துச் செத்தக் காட்சி மக்கள் நெஞ்சங்களை இரத்தச் சாறுகளாகப் பிழிந்தன.

அண்ணா சவ ஊர்வலத்துக்கு மத்திய அரசு சார்பாக உள்துறை அமைச்சராக அப்போது இருந்த ஒய்.பி. சவாண் வந்தார். மரண ஊர்வலத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நெருக்கடி களைக் கண்ட சவாண், பிரமித்துப் போய், "What a huge Crowed than the Mahatma Gandhi" 'மகாத்மா காந்தியடிகளின் மரண ஊர்வலத்தை விட - என்ன இவ்வளவு பெரிய மக்கட் கூட்டமாக இருக்கிறதே என்று வியந்து போனார்!

அறிஞர் அண்ணா மரண ஊர்வலக் காட்சிகளை எல்லாப் பத்திரிக்கைகளும் பக்கம் பக்கமாகப் படங்களாகப் பிடித்து வெளியிட்டிருந்தன. அண்டை மாநில அரசுகள் எல்லாம் அண்ணா மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து விடுமுறைகள் விடுத்தன.