பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

71


கருவி மீது ஜி.டி. நாயுடு என்ற தனது பெயரை மட்டும்தான் எழுதியிருந்தார். இதில் என்ன அதிசயம் என்றால், அந்தப் புகைப் படக் கருவியும் மறுநாளே அவரிடம் வந்து சேர்ந்து விட்டது. எப்படி அது வந்து சேர்ந்தது?

திரு. நாயுடுவினுடைய புகைப் படக் கருவி யாரோ ஒரு வெள்ளையர் கையில் கிடைத்தது. அதை அந்த ஆங்கிலேயர் கபளிகரம் செய்து கொள்ளாமல், அப்படியே எடுத்துச் சென்று, இழந்த பொருள்கள் அலுவலகத்தில், Lost Property office, அதிகாரியிடம் சேர்த்து விட்டார். அந்த அதிகாரி அக் கருவியை நாயுடுவின் முகவரிக்கு அனுப்பி வைத்தார்.

இழந்த பொருட்கள் அலுவலகம் அதிகாரி இலண்டன் அஞ்சல் துறையுடன் தொடர்பு கொண்டு, முகவரியைக் கண்டுபிடித்து, புகைப் படக் கருவியைக் கொண்டு வந்து நாயுடுவிடம் கொடுத் திருக்கிறார் அந்த அதிகாரி. எவ்வளவு பொறுப்புணர்ச்சி அந்தத் துறைக்கு இருந் திருக்கிறது என்பதைக் கண்டு திரு. நாயுடுவே வியந்து போனார்!

இன்னொரு நாள், திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், இலண்டனிலிருந்து இந்தியாவிலுள்ள அவருடைய நண்பரோடு தொலைபேசி மூலம் மூன்று நிமிடங்கள் பேசினார். ஆனால், தொலைபேசி அலுவலகம் அவர் பேசிய நேரம் ஐந்து நிமிடங்கள் என்று கணக் கிட்டுப் பணத்தை வசூலித்தது. இந்தத் தவறுதலை திரு. ஜி.டி. நாயுடு அந்தத் தொலைபேசித் துறை அதிகாரிக்குத் தெரிவித்தார்!

அதிகம் பெற்ற டெலிபோன்
பணத்தைத் திரும்பப் பெற்றார்!

அந்தத் தொலை பேசி அதிகாரி, தனது அலுவலகத்தின் தவறை உணர்ந்து, உடனே அந்த இரண்டு நிமிடத்திற்குரிய கட்டணமான இரண்டு பவுனையும் அங்கிருந்து நாயுடு முகவரிக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.

ஆங்கிலேயர்களது நாணய நடத்தையைக் கண்டு மகிழ்ந்த ஜி.டி. நாயுடு, அந்த இரண்டு பவுனையும், தொலைபேசி தொழிலாளர் நிவாரண நிதிக்கே அன்பளிப்பாக வழங்கி, அந்த அதிகாரிக்கே அதைத் திருப்பி அனுப்பி விட்டார்.