பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

77


அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு ஒருவர்தான் என்றால் - இது இன வெறியால் கூறப்பட்டதன்று!

கோவை மாவட்டத்தில், உள்ள ஒரு குக்கிராமமான கலங்கல் என்ற ஒரு சிற்றுாரில், வேளாண் குலத்தில் பிறந்து, கற்கை நன்றே கற்கை நன்றே - பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கருத்துக்கு முரணாக ஆசிரியரிடம் நடந்து, குறும்புத் தனமே பிறவிக் குணம் என்ற குறும்புத்தனத்தில் தத்தளித்து, ஏதோ முயற்சியால் தமிழ், ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட ஒரு சாதாரண மனிதரான ஜி.டி.நாயுடு என்பவர், அனைத்து நாடுகளும் போற்றிப் புகழத் தக்க ஓர் அதிசயமான ரேசண்ட் என்ற ஷேவிங் பிளேடைக் கண்டுபிடித்திருக்கிறார் என்றால் - என்ன பொருள் அதற்கு? அறிவுப் புரட்சியால் விளைந்த ஒரு தொழிலியல் விஞ்ஞானப் புரட்சி அல்லவா இது?

ஒரு பிளேடால் 200 முறை
முக சவரம் செய்யும் விந்தை!

இன்றைக்கு நாம் கடைகளில் சென்று ஒரு ரூபாய் கொடுத்து ஒரு பிளேடை வாங்குகிறோம். அந்த பிளேடால் இரண்டு ஷேவ் கூட செய்ய முடியாமல் கூர்மை மங்கி விடுவதைத் தினமும் காண்கிறோமா - இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்.

ஓரிரு வாரம்தான் அந்த பிளேடு முக மழித்தலுக்குப் பயன்படுவதைப் பார்க்கின்றோம். அந்த பிளேடுகள் எல்லாமே ஏறக் குறைய மேனாட்டார் மூளையின் கண்டுபிடிப்பு ஆகும்.

ஆனால், ஒரு தமிழன், தமிழ் நாட்டைச் சேர்ந்த மனிதன் கண்டுபிடித்துள்ள ஒரு பிளேடு; 200 - முறைகளுக்கு மேலே முக மழித்தல் பணியைச் செய்கிறது என்றால், இது என்ன சாதாரணமான அறிவியல் கண்டுப்பிடிப்பா? சிந்திக்க வேண்டும் நாம்.

ஒரு பிளேடு 200 முறைகள் முக சவரம் செய்வதோடு மட்டுமா பயன்படுகிறது? இரண்டு ஆண்டுகள் வரை அந்த பிளேடு கூர்மை மங்காமல், மழுங்காமல், மறையாமல் நிலைத்து நிற்கும் திறமும் தரமும் உள்ளதாக இருந்தது.