பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



இதுவரை உலக அரங்கில் விற்பனைக்கு வந்த மிக உயர்ரக பிளேடுகளை விட, திரு. ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த பிளேடுதான் உலகிலேயே மிகவும் இலேசானது. அதாவது, ஓர் அங்குலத்தில் ஒன்றின் கீழ் இருநூறு பாகம் குறுக்கு அளவு உடையதாகும்.

அந்த பிளேடைக் கையிலெடுத்து, அதன் இரு முனைகளையும் வளைத்து இரு ஓரங்களில் கொண்டு வந்து பார்த்தாலும் அந்த பிளேடு ஒடியாது.

ஷேவிங் ஸ்டிக்கிலே இணைத்து ஷேவிங் செய்யப்படும் பிளேடு அன்று அது. மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக் கூடிய பிளேடு ஆகும்!

இந்த பிளேடு ஏதோ குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டு வானைப் போல என்பார்களே, அதுபோல உள்ளூர் மக்களால் மட்டுமே போற்றப்பட்டது அன்று.

உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற பொருட்காட்சிகளில் எல்லாம் வைக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும், முதல் பரிசும் பெற்ற பிளேடு திரு. ஜி.டி. நாயுடு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முக சவர பிளேடு!

பிளேடு உருவான
கதை இது!

இந்த பிளேடைக் கண்டுபிடிக்கும் அவசியம் அவருக்கு ஏன் வந்தது? அதன் விவரம் இதோ:

முதல் முறையாக, 1932-ஆம் ஆண்டின்போது ஜி.டி. நாயுடு உலகச் சுற்றுப் பயணம் செய்த நேரத்தில், முக சவரம் செய்துக் கொள்ள இலண்டன் நகரிலுள்ள ஒரு முடிவெட்டும் கடைக்குச் சென்று ஷேவிங் செய்து கொண்டார். முகம் மழித்த பின்பு எவ்வளவு கூலி என்று திரு. நாயுடு கடைக்காரனைக் கேட்டபோது, அவன் ஒரு ஷில்லிங் என்றான். அதன் மதிப்பு நமது நாட்டு நாணயத்திற்கு 75 புதுக் காசுக்குச் சமம். முக சவரத்துக்கு இது அதிகப்படியான கூலி தான் என்பதை உணர்ந்த திரு. நாயுடு, கடைக்காரருக்கு காசைக் கொடுத்து விட்டு வெளிவந்த அன்றே - ஒரு முடிவான எண்ணத்துக்கு வந்தார்.