பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

85


பிளேடின் தரம், திறம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எப்படிப் பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் இப்போதும் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோமில்லையா?

இவ்வளவு பெரிய பொருட் குவியலை; அந்த ரேசண்ட் பிளேடு அமெரிக்காவில் ஜி.டி.நாயுடுவின் காலடியில் குவித்த போதும்கூட, அவற்றை எல்லாம் திரு. நாயுடு துச்சமெனத் துக்கி எறிந்தார் என்றால்; அவருடைய மன வளம் எப்படிப்பட்ட செம்மாப்புடையதாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

திரு. ஜி.டி.நாயுடு ஏன் அவற்றை எல்லாம் தூக்கி ஏறிந்தார் தெரியுமா? இங்கேதான் அவருடைய நாட்டுப் பற்றை, தேசப் பக்தியை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏன் தெரியுமா?

தனது விஞ்ஞான வருமானம்
பாரத பூமிக்கே பயன்பட ஆசை!

இந்தியன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நிகர் விஞ்ஞானப் புதுமையை, தமிழன் ஒருவனால் உருவாக்கப்பட்ட அறிவியல் புதையலை, வேறொரு நாட்டார் அனுபவிப்பதா?

அந்த விஞ்ஞான வித்தகம் தமிழ் மண்ணிலேயே தயாராக வேண்டும்; உற்பத்தி செய்யப்பட்ட அந்த ரேசண்ட் பிளேடுகள் தமிழ் மண்ணிலே இருந்து, பாரதப் பூமியிலே இருந்து ஏற்றுமதியாகி உலகெங்கும் கொடி கட்டிப் பறந்து, அதன் பெருமை, செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, புகழ் அனைத்தும் இந்திய மண்ணுக்கே வந்தடைய வேண்டும் என்ற தேச பக்தி உணர்வால்; அமெரிக்கர்களது பணக் குவியல் பேராசையைத் துக்கி எறிந்தார் நாயுடு அவர்கள்.

அதுமட்டுமல்ல காரணம், மற்றுமொரு காரணமும் அவருடைய உள்ளத்தில் ஆல்போல் தழைத்து அருகு போல வேரூன்றி இருந்தது. என்ன அது?