பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. அமெரிக்கா சென்ற தொழில் பிரமுகர்
பொறியியல் மேதையாகத் திரும்பினார்!

தமிழ் நாட்டின் தொழில் பிரமுகர் என்று புகழ்பெற்றவர் ஜி.டி. நாயுடு. ஏற்கனவே, இரண்டு முறை உலகம் சுற்றும் வல்லுநராக வலம் வந்த அவர், தற்போது மூன்றாம் முறையாக உலகைச் சுற்றிடப் புறப்பட்டார் ஜி.டி. நாயுடு.

சிறுவனாக இருந்தபோதும் சரி, வாலிபனாக அவர் இருந்த போதும் சரி, ஊர் சுற்றிச் சுற்றிப் பழக்கப்பட்ட துரைசாமி, ஜி.டி.நாயுடுவாக மாறியபோது, உலகையே முருகப் பெருமான் மாங்கனிக்காகச் சுற்றி வந்த புராணக் கதை போல, நாயுடு அவர்கள் மூன்றாவது முறையாக, 1939-ஆம் ஆண்டில் மீண்டும் உலகை வலம் வரப் புறப்பட்டார்.

ஊரார் பணத்தில்
உலகைச் சுற்றாதவர்!

உலகை வலம் வந்தார் என்றால், ஏதோ ஊரார் பணத்தில் ஜி.டி. நாயுடு படாடோபமாகப் பவனி வந்தார் என்பதல்ல பொருள். தனது சொந்தப் பணத்தைச் செலவழித்துக் கொண்டு அறிவியல் அறிவைச் சேகரிக்க உலகைச் சுற்றி வந்தார்.

ஒரு முறைக்கு மும்முறை, அடுத்தடுத்து உலகைச் சுற்றுவதென்பது மிக மிகச் சாதாரண செயலல்ல. பணம் இருந்தால் கூட மன வலிமையும், உடல் வளமையும், அறிவு செறிவும் தேவை அல்லவா? மூன்றையும் ஒருங்கே பெற்றிருந்த தொழிற் பிரமுகரான ஜி.டி. நாயுடு அவர்கள் - முதன் முதலாக ஐரோப்பா சுற்றுப் பயணத்தைத் துவக்கிச் சென்றார்.