பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27



கடைசியில் சந்திரிகா, "இதில் இருக்கும் பருப்பு நம்மில் ஒருவருக்குக்கூட ஒருவேளைப் பசியைக்கூட அடக்க முடியாது. ஆகவே இதைத் தரையில் ஊன்றித் தண்ணிர் ஊற்றிவருவோம். இது வளர்ந்த பிறகு நமக்கு நிறையப் பழங்கள் கிடைக்கும்” என்று சொன்னாள்.

ஆகவே அவர்கள், கிடைத்த இலை தழைகளைத் தின்று கொண்டு அந்தக் கொட்டையை ஊன்றித் தினந்தோறும் தண்ணிர் ஊற்றி வந்தார்கள். மரம் வளர்ந்த பிறகு காந்தாரி அதில் ஏற முயன்றாள். ஆனால் கனம் தாங்காமல் அது வளைந்து கொடுத்தது. அதில் சந்திரிகா மட்டும்தான் ஏறமுடிந்தது. ஆனால், அவள் மேலே ஏறிப் பார்த்தும் எதுவும் தென்படவில்லை. அவர்கள் தொடர்ந்து அதற்குத் தண்ணிர் ஊற்றி வந்தார்கள்! மரமும் தினமும் உயரமாக வளர்ந்தது. ஒரு நாள் சந்திரிகா அந்த மரத்தின் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தபோது, மங்கள நாயகி, காந்தாரியிடம் வந்து, சந்திரிகா வைத்திருந்த அழகான ஆடைகளையும் வைரப் பெட்டியையும் தான் கண்டுபிடித்ததாகக் கூறினாள். அவர்கள் உடனே அந்த வைரப் பெட்டியில் இருந்த வைரங்களை எடுத்துக் கொண்டு அதில் கரிகளை நிரப்பி வைத்து விட்டார்கள். கீழே இறங்கி வந்த சந்திரிகா அவர்கள் மீது சிறிதும் சந்தேகப்படவில்ல்ை. அந்த மரம் எவ்வளவு உயரம்வரை வளரும் என்பதிலேயே அவள் நினைவும் கவனமும் சென்று கொண்டிருந்தன.

ஒருநாள் மரத்தின் உச்சிக்கு ஏறிய சந்திரிகா, 'அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மாளிகை தெரிகிறது என்றும், அதன் சுவர்கள் நீலமணிக் கற்களாலும் மரகதக் கற்களாலும் ஆனவை என்றும் அதன் கூரை முழுதும் வைரமாயிருக்கிறதென்றும் அதன் கோபுரங்களில் தங்கமணிகள் இருக்கின்றன என்றும் காற்றாடிகள் காற்றடிக்கும் திசையில் திரும்பி நிற்கின்றன” என்றும் கூறினாள்.