பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

வேண்டுமென்று வெகு அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் அவளுடைய காற்செருப்பு ஒன்று நழுவி விழுந்துவிட்டது. அது பவழத்தால் பூவேலை செய்து செம்பட்டினால் உருவாக்கப்பட்ட செருப்பு.

இருட்டில் அதைத் தேடிக் கொண்டிருந்தால் நேரமாகி விடுமென்று சந்திரிகா ஒற்றைச் செருப்புடனேயே தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

மறுநாள் அந்த ஊர் அரசரின் மகனான இளவரசன் சுந்தராங்கதன் வழியில் கிடந்த சந்திரிகாவின் ஒற்றைச் செருப்பைக் க்ண்டெடுத்தான். அதன் அழகு அவனைக் கவர்ந்தது. அந்த வினாடியிலிருந்து அவன் அந்தச் செருப்பைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டான். அன்று முதல் இளவரசன் சுந்தராங்கதன் எதுவும் சரியாகச் சாப்பிடாமல் நாளுக்கு நாள் மெலிந்து வந்தான். அரசனும், அரசியும் தங்கள் மகன் மீது மிக அன்புடையவர்கள். அவர்கள் மருத்துவர்களைக் கூட்டிவந்து காண்பித்தார்கள். ஆனால் அவர்கள் தங்களால் வைத்தியம் செய்யக்கூடிய நோயல்ல இது என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே, இளவரசன் யாரோ ஒர் அழகி மீது ஆசை கொண்டு விட்டான் என்று திர்மானித்தார்கள்.

மிக மிக அழகான அரச குடும்பத்துப் பெண்களை யெல்லாம் அரசி வரவழைத்து சுந்தராங்கதனுக்குக் காட்டி அவன் விரும்புகிற பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பதாகச் சொன்னாள். ஆனால் இளவரசன் எந்த அரசகுலப் பெண்ணையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

"மகனே! உன் மனத்தில் இருப்பதைச் சொல். அவள் ஒர் ஆட்டிடைச்சியாக இருந்தாலும் உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்" என்றாள் அரசி.