பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அதன் பிறகுதான் இளவரசன் சுந்தராங்கதன் தான் எடுத்து வைத்திருந்த அழகான செருப்பைத் தன் தாயிடம் எடுத்துக் காட்டினான்.


"அம்மா என் நோய்க்குக் காரணம் இதுதான். வேட்டைக்குப் போகும்போது ஒருநாள் இதைக் கண்டெடுத்தேன்! எந்தப் பெண்ணுடைய காலுக்கு இது சரியாக இருக்கிறதோ அவளைத்தான் நான் திருமணம் செய்துக் கொள்வேன்!” என்றான்.

'மகனே! அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறேன்” என்றாள் அரசி.

அன்றே நாடெங்கும் நகரெங்கும் அரசக் கட்டளை பறைசாற்றப்பட்டது. அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அரண்மனைக்கு வந்து, இளவரசன் கையில் உள்ள செருப்பைத் தங்கள் காலில் போட்டுப் பார்க்க வேண்டுமென்று முரசறையப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக வந்து பெண்கள் பலர் அந்தச் செருப்பைக் காலில் போட்டுப் பார்த்தார்கள். ஆனால் அந்தப் பவழப்பூ பின்னிய பட்டுச் செருப்பு யாருடைய காலுக்கும் சரியாக இல்லை.