பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

என்னைப் போல் துர்ப்பாக்கியசாலி வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். எனக்கு ஏழு வயதாகும்போது என் தாய் தந்தையர் இருவரும் இறந்து போய்விட்டார்கள். அன்று முதல் இன்றுவரை நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடுமையாகப் பாடுபட்டு உழைத்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் ஓர் இளம் பெண்ணை நேசித்தேன். அவள் எவ்வளவு அன்பும் பண்பும் உள்ளவளோ அவ்வளவு அழகும் கவர்ச்சியும் உள்ளவள். இன்னும் சில நாட்களில் எங்களுக்கிடையே திருமணம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால், இன்று காலை அவள், இறந்து போய்விட்டாள். இனிமேல் என் வாழ்வில் நான் இன்பத்தையே காணமுடியாது என்று எண்ணுகிறேன். நான் பாலி மொழி படிக்கத் தெரிந்தவனாக இருந்தாலும் வேத சாஸ்திரங்களைப் படித்துச் சாதுவாக மாறிவிடலாம். ஆனால் எனக்குப் பாலி மொழி தெரியாது. ஏழு தங்கப் பசு மன்னரே, என்மீது இரக்கம் காட்டுங்கள். என் காதலியின் ஈமக் கிரியைகளைச் செய்ய எனக்குப் பதினைந்து பொன் மட்டும் கொடுத்து உதவி செய்யுங்கள்!” என்றான்.

“நண்பனே, உன் நிலையைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். பதினைந்து பொன் மட்டுமல்ல, உனக்கு நூறு பொன் கொடுக்கச் செய்கிறேன். மேலும் உனக்குத் துன்பங்கள் அணுகாதிருக்குமாக!" என்று கூறினான் ஏழு தங்கப் பசு மன்னன்.

நூறு பொன்னையும் வாங்கிக் கொண்டு மன்னனுக்கு நன்றி கூறி வாழ்த்தி வணங்கிவிட்டுச் சென்றான் இளைஞன். ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் வந்து சேர்ந்தான். அவன் தன் துன்பத்திற்கு அறிகுறியாகக் கறுப்பு சட்டை அணிந்திருந்தான். "ஏழு தங்கப் பசு மன்னரே! நீங்கள் எனக்கு கருணை காட்டினர்கள். எனக்குப் பிழைப்பதற்கு வேறு வழி புலப்படவில்லை. ஆகவே