பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


இதைக் கேட்டதும் ஏழு தங்கப் பசு மன்னனுக்குக் கோபம் பொங்கியெழுந்தது. திரும்பத் தன் கண்ணில் விழிக்கக் கூடாது என்று சொல்லி அந்தக் கறுப்புச் சட்டைக்காரனை விரட்டிவிட்டான். உண்மையிலேயே அந்தக் கொள்ளைக்காரன் ஒரு கோட்டை வாங்கக் கூடிய அளவு பணத்தைக் கொள்ளையடித்திருந்தான். அவன் அரண்மனையை விட்டு வெளியேறி வெகு துாரத்தில் உள்ள ஐராவதி நதிக்கரைக்கு வந்தான். அங்கேயிருந்த ஒரு பெரிய கோட்டையையும் அதைச் சேர்ந்த நிலங்களையும் விலைக்கு வாங்கினான். தான் எதிர்பார்க்கிற காரியம் நடக்கும் வரையிலும் அவன் அங்கேயே இருந்து வந்தான்.

ஒராண்டு காலத்திற்குப் பிறகு ஏழு தங்கப் பசு மன்னனுடைய நிதிக் கிடங்கில் இருந்த பொன்னும் வெள்ளியும் முழுக்கத் தீர்ந்து போய்விட்டதைக் கண்டான். அன்று அவன் கடைசித் தடவையாகத் தன் பணக்கார நண்பர்களுக்கு விருந்து வைத்தான். விருந்து முடிந்தவுடனே, "நண்பர்களே! என் நிதிக் கிடங்கு காலியாகி விட்டது. பொன்னும் வெள்ளியும் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. எனக்காக நீரிலும் நெருப்பிலும் குதிக்கத் தயாராக இருப்பதாக எத்தனையோ முறை நீங்கள் கூறினீர்கள். இப்போது நான் சீர்குலைந்து விட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான் அரசன்.

ஆனால், விருந்தாளிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்கள் இருண்டன. அவர்கள் கோபத்தோடு "ஏழு தங்கப் பசு மன்னரே! பிச்சை போட்டுப் போட்டு உங்கள் செல்வத்தை வீணாக்கி விட்டீர்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வோம்? நீங்கள் எங்களிடம் உதவி கேட்டுப் பயனில்லை. ஏழைப் பிச்சைக்காரர்களிடமே போய் உதவி கேளுங்கள்!” என்று சொன்னார்கள்.

தான் கேட்பது, தன் காதில் விழுவது உண்மைதானா என்று அரசனால் நம்ப முடியவில்லை.