பக்கம்:நூறாசிரியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

23


தலைவி தன் தூய்மையான காதல் அன்பிற்கு, ஒரு குழந்தையின் தாய்மை அன்பினை உவமையாகக் கூறுகின்றாள்.

ஆரவாரமான விழாக்கூட்டத்துள், நடைபயில் குழந்தை ஒன்று தன் தாயின் பிடியிலிருந்து தப்பி, அவளை எண்ணி எண்ணி மன்ம் சுழற்சியுறத் துன்புறுவதைத் தான் தன் காதலனை அடைய முடியாமல் பெறும் மனத்துயருக்கு உவமையாகக் கூறுகின்றாள்.

விழாவில் தப்பிய விழாக் காலத்துத் தவறிய ஊர் விழாவின் ஆரவாரத்திற் கிடையில் தவறிய குழவியும், மணவிழா ஆரவாரத்திற் கிடையில் நழுவிய தன் மனமும் ஒரே துயர் கொண்டன என்றாள். தாயின் கைநெகிழ்ச்சி குழவியை ஊர்விழா ஆரவாரத்திடை உய்த்துத் துயருற வைத்தது. அதுபோலவே தன் காதலனின் கால நெகிழ்ச்சியும் தன்னை இம் மணவிழாப் பேச்சின் ஆரவாரத்திடைப் புகுத்துத் துயருறச் செய்தது.

குழந்தை விழிப்பாயிருந்தால் தன் தாயின் பிடியிலிருந்து தவற நேராது போலவே, தான் விழிப்பாயிருந்தால் தன் தலைவனின் பிடியினின்று தவற நேர்ந்திராமல் இருந்திருக்கலாம் என்று தலைவி தோழிக்கு உணர்த்தினாள்.

இளமையில் குழந்தை தன் தாயை நாடுவது இயல்பு போலவே, பருவத்தில் அது தனக்குற்ற ஆடவனையோ பெண்ணையோ தேடிப் போவதும் இயல்பாம் என்ற குறிப்பும் காட்டினாள் என்றபடி

செங்கட் சேஎய் - சிவந்த கண்களை உடைய நடை பயில் குழவி. மடிப்பிள்ளை மகவும், இடைப்பிள்ளை குழவியும், நடைப்பிள்ளை சேயுமாம், சேய் - சிவந்த நிறத்தது. நடந்து தொலைவிற் செல்லும் பான்மையது. - சேயோன்.

தாயைத் தேடிக்காணாது அழுது நிற்கும் கண்களை உடையதாகலின் செங்கட் சேய் எனப்பட்டது.

தலைவியும் தன் தலைவனைக் காணாது வருத்தமுற்றுச் சிவந்த கண்ணினளாய் இருத்தலைத் தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தினள் என்றபடி

கொழுவிய கூறினும் ஒழுகாது - செழுமையான சொற்கள் - அன்பு நிறைந்த சொற்களால் கூறித் தேற்றினும் தம்பால் பழகாது தன் துயர் நீக்கி அமைதியுறாது.

தன் தாயையன்றி வேறு எவரைக் காணினும், எவர் எத்தகைய செழுமையான அன்பு பொதிந்த சொற்களைக் கூறினும் அக்குழந்தை அவர்டால் ஆறுதல் கொள்ளாததைப் போலவே, தலைவி தன் தலைவன் பாலன்றி வேறு எவருடைய அன்பும் பரிவும் வாய்ந்த சொற்களாலும், செயல்களாலும் ஆறுதல் பெறாள்-அமைதியுறாள் என்று உணர்த்தியவாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/49&oldid=1227664" இலிருந்து மீள்விக்கப்பட்டது