பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

புதியதோர் உலகு செய்வோம்

வாழ்நாள் முழுவதும் எதற்கும் ஆகாதவளாக ஒதுக்கப்பட்டாள்; அந்நாட்களில் உயிருடன் எரிக்கப்பட்டாள். இதற்கு அடிப்படைக் காரணம், அவள் வேறொருவனுக்காக மக்களைப் பெற்று, அவன் வமிச ஆற்றலை, உடமைகளைப் பெருக்கிவிடக்கூடாது என்பதுதான்.

இத்தகைய அநியாயங்கள், நியாயமானவை என்று கருதப்படும் வகையில், பெண், சடங்குகளாலும், சம்பிரதாயங்களாலும், வழிவழி மரபுகளாலும் (மூளைச் சலவை செய்யப்பட்டாள்) பதப்படுத்தப்பட்டாள் என்றால் மிகையில்லை.

காந்தியடிகளிலிருந்து, கவியரசர் பாரதி வரையிலும் குழந்தை மணத்தின் தீமைகளைக் கண்டித்துப் பெண் கல்வியை வற்புறுத்தி, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முனைந்தனர். கைம்பெண்கள் நிலை மாறி, மறுமலர்ச்சியும் நல்வாழ்வும் பெற, கல்வி கற்று அவர்கள் பொருளாதார சுதந்தரம் பெற வாய்ப்புகளை ஏற்படுத்தியும், மறுமணம் அவர்களுக்கும் உரியதாக வேண்டும் என்றும் முனைப்புடன் அரும்பாடு பட்டனர். சில கொடுமைகளுக்குச் சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்றும் கண்டனர்.

இன்னொரு பெரிய தீமை, பெண்ணை விலை பொருளாகக் கணிக்கும் கணிகையர் மரபு. பெண் வெறும் அடித்தள உழைப்பாளி - அடிமையாகக் கருதப்படும்போது அவள் குடும்பத்துக்குரியவளாகிறாள். இன்னொருபுறத்தில், சிற்சில உரிமைகளை அவளுக்குக் கொடுத்து, அவள் அறிவை ஆடல் பாடல் என்ற கலைத்தேர்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர்.இந்த வாய்ப்புகளின் நோக்கமும், ஒர் ஆணின் மகிழ்ச்சிக்கான இன்ப அநுபவங்களின் பொருட்டாகவே இருக்கிறது. இதற்கென்றே ஒரு வகுப்பை