பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

21

தாய்வீட்டிலிருந்து பெற்றுச் செல்லும் வண்மை வரிசைகளின் சிறப்பு என்றுதான் அமைகின்றன. தனது மகனோ மகளோ சிறப்பாக இல்லாமல் சகோதரி மக்கள் சிறப்படைந்தனர் என்ற மாதிரியான கூறுகளில்கூட, எரிச்சலும் பகைமை உணர்வும் இயல்பானதாகப் பாதுகாக்கப்படுகிறது. சகோதரர்களை மணந்த பெண்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையிலேயே கூட்டுக் குடும்பங்கள் கலகலத்துப் போய் பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் உள்ளாகின்றன என்பதே உலகுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

‘ஆண்பிள்ளைகள் ஒண்ணு சேர்ந்திடுவாங்க! பொம்பிளங்க சேராது’ என்பது பிரசித்தம்.

ஓர் ஆணைச் சார்ந்து அவனுக்கே தனியுடமையாக வாழும் வாழ்வில் இன்னொரு பெண் பங்கு கொள்ள வருகிறாள் என்ற பெருமையிலும்கூட, சார்புநிலையே ஆதாரமாக நிற்கிறது.

இந்தக் காரணங்களைக் காட்டியே, பெண்களை வெறும் அடிமைகளாக, வெளி உலகம் தெரியாதவர்களாக, கணவனின் நடவடிக்கைகளில் சம்பந்தம் இல்லாதவர்களாக, பொருளாதார உரிமைகளில், குடும்ப இயக்கம் மற்றும் சிறப்பம்சங்களில் பங்கு மறுக்கப்பட்டு, உழைப்பாளிகளாகவே சுரண்டிக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்ணின் கல்வித்திறமைகளும், பொருளாதாரப் பங்கேற்புக்களும், குடும்ப அமைப்புகளை மேலும் வளமுடையதாக உயர்த்திவிடவில்லை.

இன்னமும் பாரதத் திருநாட்டில், பின்தங்கிய வடமாநிலங்களில், பெண் ஏழு வயசு மகளுக்குத் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாள்.