பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

புதியதோர் உலகு செய்வோம்

பெற்றுத் தரவும் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற கருத்தே நிலைப்படுத்தப்பட்டது. குடும்பம் என்ற அமைப்பில் அவன் நாயகன்; அவளும் மக்களும் அவனுக்கு அடங்கியவர்கள். அதுவும் பெண் மக்களுக்கு எந்த உரிமையும் சலுகையும் இல்லை.

அந்நாள் ஆணாதிக்கக் கோட்டையாக இருந்த குடும்ப அமைப்பில் இந்நாள் மாறுதல்கள் வந்துவிட்டன. பெண் ஊமையாய் உழைப்புப் பாவையாய் பிள்ளை பெறும் இயந்திரமாக அந்நாள் இயங்கினாள். இந்நாட்களிலே, அவள் குடும்பத்தின் பொருளாதார உற்பத்தியில் ஆணைப் போல பங்கு பெற கல்வியும் அறிவாற்றலும் பெற்றிருக்கிறாள். கூட்டுக் குடும்ப அமைப்புகள் இந்நாள் தகர்ந்துவிட்டன. எனவே, குடும்பம் என்ற அமைப்பில், மக்களைப் பெற்று நல்ல சமுதாயக் குடிமக்களாக உருவாக்கும் பொறுப்பு இருவருக்குமே உரியதாகிறது. மனையறம் என்பது பெண்ணுக்கு மட்டுமே என்ற நியதி இன்று பொருந்தாது. குடும்பம், மக்கள் சார்ந்த எல்லாப் பொறுப்புகளையும் பற்றி முடிவு செய்யும் உரிமை அவளுக்கும் உண்டு. பெண், உழைப்புக்கும் உடல் போகத்துக்கும் உரிய ஆணின் உடமை என்ற ‘இலக்கணம்’ முதலில் தகர்க்கப்பட வேண்டும். குடும்பப் பராமரிப்பு, வீடு, துணிமணிகள் சுத்தம் செய்தல், சமையல் போன்ற அனைத்துப் பணிகளுமே இருபாலரும் பகிர்ந்து கொள்ளும் கடமையாக இருக்க வேண்டும். பாலியல் சார்ந்து அவள் பலவீனமானவள், எந்த நிலையிலும் அவள் ஆணின் ஆளுகைக்குள் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் திணிக்கும் ஆணாதிக்கப் போக்கும், பொருளியல் சார்ந்து அவளைப் பொருளுக்காக மட்டுமே பேரம் பேசும் திருமண வழக்கங்களும் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.