பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

37

ஆண்-பெண், சாதி, சமயம், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இருக்கலாகாது. வசதிபடைத்த பெற்றோரிடம், அவரவர் வருவாய்க்கேற்ப பொருளும், வசதிகளில்லாத பெற்றோருக்கு எந்தக் கட்டணமும் இல்லாமலும், அந்த வித்தியாசத்தைக் குழந்தைகள் உணர இடமில்லாத வகையிலும், மழலைப் பள்ளிகள் இயங்க வேண்டும்.

இப்பள்ளிகள், நாடு முழுவதும் ஒரே மாதிரியில், ஒரே சீராக இயங்க அந்தந்தப் பிரதேச மொழியே - தாய்மொழியே கல்விப் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். சிறுவர் ஒரே சமயத்தில் நாலைந்து மொழிகளைக் கற்க முடியும் என்றாலும், தாய்மொழி மட்டும்தான், வெளியீட்டுத் திறனை இயல்பாக ஊக்குவிக்கும் முதல் மொழியறிவாகக் குழந்தையைப் பிற உலகுடன் தொடர்பு கொள்ளச் செய்கிறது. அந்த இயற்கை முறையைப் பற்றி எறிந்துவிட்டு, வீட்டிலும் வெளியிலும் பழக்கமில்லாத வேற்றுமொழியை, அந்த மொழியே தாய்மொழியில்லாத ஒர் ஆசிரியரைக் கொண்டு பிஞ்சு நெஞ்சங்களில், மூளைகளில், கைகளில் திணிக்கும் கட்டாயம் இந்நாள் சுதந்தர இந்தியாவில் நடைமுறையாக்கப்பட்டிருக்கிறது. கட்டாயமாக்கப்படும் வேற்று மொழிப் பயிற்றுக்கல்வி, பிள்ளைகளின் இயல்பான படைப்புத்திறன், கூரிய அறிவு, சிந்தனையாற்றல் என்ற ஊற்றுக்கண்களில், வெளிப்பட வழியில்லாமலேயே மூடிவிடுகின்றன. தாய், தாய்மொழி, தாய்நாடு என்று எந்த உணர்வும் இல்லாமல், பொருள், பொருள் என்ற இலக்கிலேயே தாங்கள் பெற்றிருக்கும் அறிவியல் திறமைகளை அடகு வைப்பதற்குத் துணிகிறார்கள்.

மாறாக, அடிப்படையில் தாய்மொழியறிவும், இயல்பான திறமைகளின் உந்துதல்களும் தடைபடாமல்