பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

41

ஊடகங்கள் வாயிலாகத் தம் படைப்பாற்றலை, சிந்தனை வண்மையை வெளிப்படுத்தும் இலக்கிய ஆசிரியர், பரந்த வெளி உலகிலும் தம் செல்வாக்கைப் பதிக்கிறார். இவர்கள், பொருள், புகழ் என்ற நோக்கில் சோரம் போகும் தீமை இந்நாள் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது,

இந்நாள், தகவல்-அறிவுக்களஞ்சியமாக, பலநோக்குப் பயன்பாட்டுச் சாதனமாக கூடிவிட்ட கணினியும்கூட, தொலைக்காட்சிபோல், வெறும் களிப்பூட்டும் பண்பாட்டுச் சீரழிவுக்கான சாதனமாக மாறிவிடுவதும் கூடத் தவிர்க்க முடியாதது என்று அண்மையில் ஒர் அன்பர் குறிப்பிட்டார். பெண்களையும் சிறார்களையும் பயன்படுத்தி, இந்த வணிக அமைப்புகள், நவீன விளம்பர உத்திகளாக, கட்டறுத்து விடப்படும் பாலியல் விகாரங்களையும், வன்முறைத் தாக்குதல்களையுமே ஒளிபரப்புகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நுகர்பொருள் வாணிபத்தை மிகச் செல்வாக்குடன் அடிப்படைத் தேவைகளே நிறைவேறாத மக்களின் மீது திணிக்கின்றன.

இந்திய இலக்கியம் - குறிப்பாகத் தமிழ் இலக்கியம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டதென்றாலும், சென்ற நூற்றாண்டுகளில்தான் அது ஜனநாயகத்தன்மை கொண்டதாக, சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மந்திரங்களுக்கேற்ப கனவு கானும் படைப்புகள் மலர்ந்திருக்கின்றன. என்றாலும், கொள்கையற்ற அரசியல் எல்லாப் பிற துறைகளிலும் புகுந்து குலைத்திருப்பது போல், எழுத்துத் துறையையும் வணிகமயமாக்கி, அதன் அடிநாதத்தைக் குலைத்து வருகிறது.