பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

சுதந்தரப் பொன்விழா ஆண்டை ஒட்டியும், புத்தாயிரத் துவக்க விழாவை ஒட்டியும் மகளிர் சமுதாய நிலை குறித்து ஆயும் வகையில் பல்வேறு அரங்குகளில் நிகழ்ந்த கருத்தரங்குகளில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளுடன் அணிமைக்காலங்களில் தினமணி, பாரதமணி, பெண்ணே நீ தினமலர் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.

அரசியல் சுதந்தரத்துக்காகப் போராட்டத்தில் குதித்த தலைவர்கள் பலரும், முதலில் மகளிரை ஒடுக்கிய சமுதாயத் தீமைகளை உணர்ந்து அவற்றை அகற்றத்தான் பாடு பட்டனர். இளம்பருவத் திருமணம், குழந்தைக் கைம்பெண்களை உருவாக்கி இருட்டில் தள்ளியது. பலதார மணம், மணம் புரிந்து கொண்டு அற்பக் காரணங்களுக்காக ஒதுக்கி வைத்து அபலைகளாக்குதல், தேவதாசி முறை என்ற பெயரில் விலைமகள் வாழ்வைக் கட்டாயமாக்குதல் என்றெல்லாம் பெண் எந்த உரிமையும் இல்லாதவளாக ஒடுக்கப்பட்டாள்.இந்த ஒடுக்குதலுக்குச் சமய சாத்திரங்கள் துணை நின்றன. நூற்றாண்டுகள் இக்கொடுமைகளால் குறுக்கப்பட்டு, ஆணாதிக்க மரபுகளாலும், சமயம் சார்ந்த நெறிகளாலும் பதப்படுத்தப்பட்ட பெண், அரசியல் சுதந்தரத்துக்குப்பின், சட்ட பூர்வமாகப் பல தீமைகளில் இருந்து விடுதலை பெற்றாள். ஆணும் பெண்ணும் சமம் என்ற அடித்தளத்தில் அவள் குடியாட்சி உரிமையையும் எந்தப் போராட்டமும் இல்லாமல் பெற்று விட்டாள். இத்துணை ஆண்டுகளில் பெண்களின் நிலை எல்லா அரங்குகளிலும் மாற்றம் பெற்றிருக்கிறது.

பெண்கல்வி பெற்று, எல்லாத்துறைகளிலும் ஆணுக்குச் சமமாகவும் மேன்மையாகவும், தன் ஆற்றலை