பக்கம்:புது வெளிச்சம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றியுரை


நீங்கள் நினைப்பதை இன்று சொல்லாவிட்டால் நீங்கள் நினைக்காததை நாளை சொல்லும்படியாகிவிடும்' என்ற அறிஞரின் வாக்குக்கேற்ப நல்ல சிந்தனைகளைக் காலத்தே மக்களிடம் கொண்டு சேர்க்காவிட்டால், பிற்போக்கான கருத்துக்களும் செயல்பாடுகளும் அவர்களிடம் வேரூன்றிவிடும் என்ற உண்மையை இன்றைய சமுதாயம் நமக்குச் செவ்வனே அறிவுறுத்திக் கொண்டுள்ள இந்த நேரத்திலும் நாம் சொல்லத் தாமதம் செய்வோமேயானால் அதன் முடிவு...?

என் தந்தை எழுத்தைத் தம் வாழ்வின் வேராகவும், தமது சுவாசமாகவும் கருதியவர். இலக்கியம் என்பது சமூகத்தின் மனசாட்சியாகவும், மனித குலத்தின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்ற கருத்தியலோடு வாழ்ந்தவரும்கூட.

அவரின் படைப்புகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அவரின் அவா, இறுதி மூச்சு வரை நிறைவேறாமல் போனது. அவரின் மறைவிற்குப் பின் வெளிவந்த 'வெள்ளியங்காட்டான் கவிதைகள்’, ‘கவியகம்’, ‘நீதிக்கதை'களைத் தொடர்ந்து யதி வெளியீடாக புது வெளிச்சம் வெளிவருகிறது.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி முதல் விதையை ஊன்றி ஊக்குவித்து உதவிய மதிப்பிற்குரிய கவிஞர் புவியரசு அவர்களையும், பாவலர் இரணியன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

சற்று சிதிலமடைந்த இப்படைப்பை சிரமத்தின்பாற்பட்டும், மிகுந்த ஈடுபாட்டுடனும் உழைத்து அச்சிலேற்றிய அருமை மைந்தர்களுக்கும், இதைத்தமது சொந்த நூலாகக் கருதி அழகாக அச்சிட்டு வழங்கியதிலகா ஆப்செட்பிரஸ் வேனில் அவர்களுக்கும், சிறந்த கருத்துக்களைத் தந்து உதவிய கவிஞர் தங்க. முருகேசன் அவர்களுக்கும், மற்றும் என் அன்புப்புதல்வனும், புதல்வியுமாகிய 'ராதா மகேந்திரன்' அவர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

அன்புடன்
வெ.இரா.நளினி

புது வெளிச்சம்

ᗍ ix