பக்கம்:மகான் குரு நானக்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்.வி. கலைமணி

21


வயலுக்குச் சொந்தக்காரன் இதைப் பார்த்துவிட்டு லபோதிபோ என்று வாயிலடித்துக் கொண்டு ஓடி வந்தான். மாடுகள் வயலில் இறங்கி, பயிர்களைப் படுநாசப்படுத்தி, மண்ணோடு மண்ணாகப் பயிர்கள் மிதிபட்டிருப்பதைக் கண்டான் அந்த ஏழை உழவன்!

மாடுகள் யாருடையது? யார் மேய்ப்பனென்று அவன் சுற்றும் முற்றும் பார்த்தபோது, மாடுகளை மேயவிட்டு விட்டு மரத்தடியிலே தூங்குவது போல கிடக்கும் நானக்கைக் கண்டான் அந்த விவசாயி. வயிறு எரிந்தான் அக்குடியானவன்! நேராக படுத்துக் கிடக்கும் நானக் எதிரிலே வந்து நின்று 'நியாயமா உனக்கு? என் பயிர்களை இப்படிப் பாழ்படுத்தலாமா? மாடுகளை மேய விட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு தூங்குவது அக்கிரமம்' என்றெல்லாம் அக்குடியானவன் பயிர் அழிந்த ஆத்திரத்தால் கண்டபடி பேசினான்.

தியானத்திலே இருந்து எழுந்த நானக், சிறிதும் அந்த ஏழை மகன் மீது கோபப்படாமல், 'அன்பரே கோபமோ ஆத்திரமோ படாதீர் இந்த மாடுகள் உனது வயலில் மேய்ந்தால் உனக்கு நட்டம் வராது. மேலும் மேலும் உனது வயல் வளமாக விளையப் போகிறது பார் இதுவரை விளையாத அளவுக்கு உனது வயல் விளைய போவதைப் பார்' என்றார் நானக்

மாடுகள் பயிர்களை மிதித்து மேய்ந்து நாசப்படுத்திவிட்டதை நான் நானக்கிடம் கேட்டால், அவன் என்னைக் கேலி செய்கிறான். அடுத்த முறை நல்ல விளைச்சல் விளையும் என்று கிண்டலும், குத்தலுமாகப் பேசுகிறான் என்று அந்த ஏழைக் குடியனவன் ஓடிப்போய் ஊர்த் தலைவரிடம் அழுது புகார் கூறினான்.

ஊர்த் தலைவரல்லவா? உடனே தனது வேலைக்காரர்களை ஏவி, உழவன் புகார் உண்மைதானா? என்று பார்த்து வருமாறு கூறினார் அந்தப் பணியாட்கள், ஏழை ஊழவனுடன் சென்று அவர்கள் வயல்களைப் பார்த்தார்கள்.