பக்கம்:மகான் குரு நானக்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மகான் குருநானக்


பணப்பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். பெட்டி நிரம்பிப் பணம் வழிந்து கிடந்தது. தானியங்கள் விற்பனை ஆனதற்கான அடையாளங்கள் ஏதும் தென்படவில்லை. அதே நேரத்தில் பணம் நிறைய நிரம்பிக் கிடந்தது. ஒன்றுமே புரியாத அரசு அதிகாரிகள், வியப்பால் களஞ்சியக் கிடங்கை விட்டு வெளியேறினார்கள்.

நானக் தானியக் களஞ்சியத்தை மட்டும் விட்டு வெளியேற வில்லை. இல்லற வாழ்க்கையை விட்டு விட்டே சென்றுவிட்டார். ஆம், அவர் துறவியானார் தனது எண்ணத்தை நானக், தனது தமக்கையின் கணவரிடம் கூறினார்; வெளியேறினார்.

அவர் தமக்கையிடமும், மைத்துனரிடமும் கூறிவிட்டு வெளியேறும்போது "நான் இல்லற வாழ்க்கையிலிருந்தே வெளியேறுகிறேன். ஏனென்றால், எனது பிறவியின் முதல் வேலை முடிந்துவிட்டது. இல்லறத்தில் இருந்து துறவறத்திற்குப் போகிறேன். மனிதப் பிறவியில் எப்படி உண்மையாக வாழ வேண்டும் என்பதைக் குடும்பத்தில் வாழ்கின்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே செல்லுகின்றேன். இல்லறத்தில் வாழும்போதே இறைவனை அறிவது எப்படி என்பதை உலகத்துக்கு உணர்த்தவே போகின்றேன்” என்று நானக் கூறினார்.

தமக்கையும், மைத்துனரும் போக வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள்! கண்ணிர் விட்டார்கள். இருந்தும், நானக் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். உலக மக்களுக்குரிய ஞானவழிகளை உபதேசங்களாக ஊர்தோறும் உரைக்கவே நானக் சுல்தான்பூர் நகரைவிட்டுப் புறப்பட்டார்.

நானக் துறவறத்தைக் கவர்னர் கேள்விப்பட்டு வருந்தினார். உண்மையான ஒரு மக்கள் ஊழியரை தெய்வாம்சம் பெற்ற ஒரு தானியக் களஞ்சியக் காப்பாளரை இழந்து விட்டோமே என்று திவான் ஜெய்ராமிடம் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் பீபி நானகி கண்ணிர் சிந்தியபடியே இருந்தார்.