பக்கம்:மகான் குரு நானக்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மகான் குருநானக்


பேய் ஒட்ட வந்த முல்லா தோல்வியோடு திரும்பிப் போனார். அவர் திவான் ஜெய்ராமைச் சந்தித்து, 'நானக் நல்லறிவுடன்தான் இருக்கின்றார். ஆனால் மக்கள் இனத்திற்குத் தொண்டு செய்ய தனது வழிதான் சிறந்தது என்ற திடமனதோடு இருக்கிறார்' என்று அவரிடம் கூறி விட்டுச் சென்றுவிட்டார் முல்லா.

பிே நானகி, தனது தம்பியை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் பலவும் தோல்வி கண்டுவிட்டதை அறிந்து மனமுடைந்து போனார். ஒரே தம்பி அவர் வாழ்வு இப்படியாவதா என்ற சோகமும், மனவருத்தமும் அவரை மிகவும் துன்புறுத்தி வாட்டியதால், தானே தம்பியைப் பார்த்து, தக்க முறைகளைக் கூறி அழைத்து வரலாம் என்று எண்ணி, அவர் தனது தம்பி தங்கியுள்ள கல்லறையை நோக்கி வந்தார்.

தம்பியைச் சந்தித்தார் கண்ணீர் சிந்தினார் தம்பி, உன்னை உயிருக்கு உயிராக நானும், உனது மனைவி மக்களும், மைத்துனரும், தாய் தந்தையரும் மதிக்கும் குடும்பத்தை விட்டு விட்டு, நீ இப்படி கல்லறையிலே வந்து அநாதையாக இருக்கலாமா? என்ன குறையென்று கண்டு நீ ஏன் வந்தாய் தம்பி?" என்று பீபி நானகி அழுத குரலோடு தழுதழுத்தபடியே தனது தம்பியைக் கேட்டார்.

'எனது அன்பு சகோதரி நான் அநாதை அல்ல; இந்த மக்கள் குலம் எல்லாமே எனது குடும்பம்தான். எனக்கென்று ஒரு குடும்பம் இல்லை. அந்த மக்கள் இனத்திற்குத் தொண்டு செய்யவே நான் புறப்பட்டு விட்டேன். எனது சேவை மக்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பெரிய குடும்பத்திற்கு நான் சேவை செய்ய வந்து விட்ட போது, எனது குடும்பத்திற்கும் தொண்டு செய்வதாகத்தான் பொருள்' என்று குருநானக் கூறிய போது பீபி நானகி, தன் தம்பியின் முடிவைக் கண்டு தேம்பித் தேம்பி அழுதபடி போனார்.