பக்கம்:மகான் குரு நானக்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மகான் குருநானக்


குரு நானக் தச்சர் வீட்டில் தங்கி இருந்த அன்று, அந்த ஆளுநர் ஒரு விருந்து நடத்தினார். அந்த விருந்தில் மதபேதமின்றி எல்லாச் சமியார்களும் மத குருமார்களும் விருந்துண்ணும் வாய்ப்புப் பெற்றார்கள். அன்று. நானக் அந்த ஊருக்கு வந்திருக்கும் செய்தியும், அவர் தச்சரது வீட்டில் தங்கியுள்ளதும் அந்த ஆளுநருக்குத் தெரிந்தது. அதனால், அந்தக் கவர்னர், ஓர் அதிகாரியை அனுப்பி குரு நானக்கையும் விருந்துண்ண வருமாறு அழைத்தார்.

ஏழைத் தச்சர் வீட்டிலேயே தங்கியிருந்த நானக், வந்த அதிகாரியிடம் தான் தச்சர் வீட்டிலேயே உணவு உண்டு கொள்வதாகக் கூறிவிட்டார். அத்துடன் இல்லாமல் கவர்னர் நடத்தும் விருந்துக்குத் தன்னால் வர இயலாது என்றும் கூறிவிட்டார்.

குரு கூறியனுப்பிய விவரத்தைக் கேட்ட கவர்னர், குருநானக் ஓர் இந்து கவர்னரான நாம் ஒரு முஸ்லீம், மத அடிப்படையில் நானக் நமது விருந்தில் உண்ண மறுத்து விட்டார் போல் இருக்கிறது என்று எண்ணி குருநானக்குக்காக தனி விருந்து நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் செய்து உணவுகளைத் தயாரித்தார்.

கவர்னர் மறுபடியும் ஓர் அதிகாரியை அனுப்பி, குருநானக்கை விருந்துக்கு மீண்டும் அழைத்து வருமாறு பணித்தார்.

'எனக்கு ஜாதி வேற்றுமையோ, மத பேதமோ ஏதும் கிடையாது. எனக்காக தூய்மை செய்யப்பட்ட இடமோ, தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவோ தேவையில்லை. என்னைப் பொறுத்த வரை இறைவனால் படைக்கப்பட்ட பூமியும், அதனுள்ளே உள்ள இடங்களும் தூய்மையானவையே. மனித குல மக்கள் எல்லாரும் எனக்கு சகோதரர்களே அல்லாமல், அவர்களிடம் பேதம் பார்ப்பவன் நான் அல்லன். ஆனால், கவர்னர் வீட்டு விருந்தில் மட்டும் நான் சாப்பிட மாட்டேன்' என்று கூறி அந்த அதிகாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார் நானக்.