பக்கம்:மகான் குரு நானக்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. எது உண்மை? எது பொய்?

மெனாபாத் நகரத்திலே தங்கியிருந்த குரு நானக்கும், மந்தானாவும் ஏழை தச்சர் வீட்டிலே இருந்து மீண்டும் ஊர் ஊராக ஞானோபதேசப் பயணம் செய்திடப் புறப்பட்டார்கள். இருவரும் ஒரு காட்டுப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.

இடையில் மாண்வன் மர்தானாவுக்கு ஒரே பசி! அவனுடைய கண்கள் இருண்டன. நடை மிக தளர்ந்தது. நகரங்களின் வழியாகச் சென்றால், கடைகள் இருக்கும். உணவுகளை வாங்கி உண்ணலாம். ஆனால், நகரங்களிற்குள் குரு போவதில்லை. பெரும்பாலும் சிற்றூர்கள், பேரூர்களுக்கே செல்கிறார். அதனால், அவனது பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மாணவனுக்கு!

இருந்தாலும், அவனால் பசியை அடக்க முடியவில்லை. மனம் விட்டே கேட்டுவிட்டான் மர்தானா தனது குருவை! "நகரத்துக்குள்ளே நீங்கள் ஏன் போக மறுக்கிறீர்கள். இப்போது எனக்குப் பசி! எங்கே செல்வேன் பசியாறிட! எதையாது உண்டால்தான் என்னால் நடக்க முடியும் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான் மர்தானா!

நானக் மாணவனைப் பார்த்து, ஒரு சிறு சிரிப்பை சிரித்துக் கொண்டு, மர்தானா, நகரங்கள் பாபத்தின் இருப்பிடங்கள். அதனால்தான், நான் நகரத்தினுள் அதிகம் செல்வதில்லை. உனக்கு பசி தானே எடுக்கிறது? இதோ இந்தக் காகிதத்தைக் கொண்டு போய் நகரத்தில் உள்ள மக்களிடம் காட்டு. இதில் எழுதி இருக்கும் வாசகத்தின் உட்பொருளை உணர்பவர் எவரோ, அவர் உனக்கு உணவு வழங்குவார் என்று சொல்லி ஒரு காகிதத்தை மர்தானாவிடம் கொடுத்தார்.