பக்கம்:மகான் குரு நானக்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

47


அந்த நேரத்தில் குரு நானக் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். அந்தப் பாட்டைக் கேட்டு, மரம், செடி, கொடி, புல்பூண்டுகள் எல்லாமே மயங்கி நின்றன. அவ்வளவு அற்புதமாக அந்த இசை அமைந்திருந்தது. நானக்கின் பாடல் சஜ்ஜன் அன்று வரை செய்திருந்த கொலைகளையும் கொள்ளைகளையும் பற்றிக் குறிப்புக் காட்டுவன போல விவரித்தது. அவன் செய்த பாவச் செயல்களுக்கு எல்லாம் ஒரே வழி நரகம்தான் என்பதையே அந்தப் பாடல் எதிரொலித்தது.

சஜ்ஜன் அந்தப் பாடலைக் கேட்டான் ஓ...! வென்று கதறி அழுதான் சத்குரு அவர்களே! நான் கொலைகாரன்தான்! கொள்ளைகாரன்தான் எண்ணிலாத கொலை, கொள்ளைகளைச் செய்தவன்தான்! நான் அந்த பாவத்திலே இருந்து தப்புவதற்கு என்ன வழி? வழி என்ன குருவே! என்று குருநானக் கால்களிலே விழுந்து அழுதான்!

சஜ்ஜன் கொலை, கொள்ளைகளைச் செய்தவன்தான். ஆனாலும் தனக்கு மனசாட்சி உண்டு என்பதற்கு அவன் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குமளவுக்கு அவன் நானக்கின் ஞானப் பாடலால் திருந்திய மனிதனானான். சத்குரு பாடிய பாடல் அவனது பாவங்களைக் குத்திக்குடைந்து அவற்றைக் கொலை செய்து, அவனது மனத்தைத் தூய்மைப்படுத்தியது.

அப்போது சத்குரு நானக் அந்தக் கொலை பாதகனுக்கு ஓர் உய்யும் வழி கூறினார்! ஏ, சஜ்ஜனா உன்னுடைய பாவச் செயல்களிலே இருந்து நீ மீள வேண்டும் என்று நம்புவது உண்மையானால், நான் சொல்வது போலச் செய்தால் நீ மன்னிப்புப் பெறலாம்; மன்னிக்கப்படுவாய் என்றார்.

என்ன குருதேவா அது என்று கேட்டான். அதற்கு சத்குரு

"யார் யாரை நீ கொலை செய்தாயோ. எவரெவரை நீ கொள்ளையடித்தாயோ, அவர்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய குடும்பத்தினர்களைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவர் கால்களிலும் விழுந்து, நான் செய்தது தவறுதான். இப்போது மனம் திருந்திவிட்டேன். என்னை மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை கூறுங்கள் என்று கதறி அழுதுகேள்! என்ற அறிவுரையை சத்குரு