பக்கம்:மகான் குரு நானக்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. குருத்துவாரம்

துள்ளத் துடிக்கக் கொலைகளைச் செய்து பாவங்களைச் சேர்த்துக் கொண்ட சஜ்ஜன், ஊர் ஊராகச் சென்று பணக்காரர்களது செல்வங்களைக் கொள்ளையடித்துப் பாவங்களை உருவாக்கிக் கொண்ட சஜ்ஜன், அந்த குடும்பங்களை எல்லாம் தேடிச் சென்று அவர்களது கால்களைத் தனது கண்ணீரால் கழுவிய சஜ்ஜன், திருந்திய மனிதனானான். பாவங்களிலே இருந்து விடுதலை பெற்றான். தன்னை மனிதனாக்கிய சத்குருவுக்கு மரியாதை செலுத்தினான்.

எந்த சத்குருவின் ஞானபோதனையாலும், மூல மந்திரச் சக்தியின் நம்பிக்கையாலும் திருந்திய ஆன்மவாதியாக மாறினானோ அவன் தனது சத்குருவுக்கு நினைவகமாகக் கோவில் ஒன்றையும், ஏழைகளது பசிக்குப் புசிக்க தர்மசாலை ஒன்றையும் உருவாக்கினான்.

சீக்கிய மதத்தை தழுவிய மக்கள் கட்டிய கோவில்களில், சஜ்ஜன் கட்டிய சீக்கியத் திருக்கோவில்தான் முதல் கோவிலாகும். அன்னதான் தர்ம சாலைகளிலும் அவன் நிறுவிய அன்னதான மடமே இன்றும் முதலாவதாகத் திகழ்கின்றது.

சத்குரு நானக், சஜ்ஜன் என்ற கொலைகாரனை மனிதனாக்கிய பிறகு மீண்டும் தனது அறிவு கொளுத்தும் ஆன்மிக ஞானப் பயணத்தைத் துவங்கினார். அவருடன் மர்தானாவும், பாலாவும் தொடர்ந்தனர், மூவரும் வடநாட்டுப் பகுதிகளிலே உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், மேடு பள்ளங்கள், சமவெளிகள் ஆகிய எல்லாப் பகுதிகளையும் கடந்து ஆண்டுக்கணக்காக ஆன்ம உபதேசம் செய்து கொண்டே வந்தார்கள்.