பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

119



போல் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். இதையும் வேண்டா வெறுப்பகாவாவது ஏற்றுக் கொள்ளலாம்.

எல்லாரும்

நாங்கள் எல்லேமும், நீங்கள் எல்லீரும், அவர்கள் எல்லாரும் என எழுதுவது விதி. ஆனால் மக்கள், நாங்கள் எல்லாரும், நீங்கள் எல்லாரும், அவர்கள் எல்லாரும் என எல்லாரும் என்பதைத் தன்மை - முன்னிலைக்கும் பயன் படுத்துகின்றனர். எனவே, எல்லாரும் என்பதையே மூன்றிடங்கட்கும் கொள்ளலாம் என்பதையும் வேண்டா வெறுப்பாயாவது ஏற்றுக் கொள்ளலாம்.

ஆறாம் வேற்றுமை உருபு

எனது மகன் முருகன், எனது நண்பன் என எழுது கின்றனர் மக்கள். திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும் எனது மகன், எனது மருகர் என்று ‘எனது’ என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. (இது குறித்து வேறொரு நூலிலும் எழுதியுள்ளேன்.)

ஆனால், ‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபை, எனது வீடு, எனது மாடு எனப் பின்னால் வரும் உடைமைப் பொருள் அஃறிணையாயிருந்தால் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது விதி.

எனது மகன், முருகனது நண்பன் என்பனவற்றை, எனக்கு மகன், முருகனுக்கு நண்பன் என எழுத வேண்டும் என்பது பழைய விதி. எனக்கு என்பதை வேண்டுமானால் விட்டு விடலாம். ஆனால், எனது மகன், முருகனது நண்பன் என எழுதாமல், என் மகன் என உருபு இன்றியே எழுதலாம்; முருகன் நண்பன் அல்லது முருகனின் நண்பன் அல்லது முருகனுடைய நண்பன் என்று எழுதலாம்.